திமுக கட்டமைப்பில் மாற்றம்: 9 முக்கிய தீர்மானங்கள்
23 ஆவணி 2026 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 170
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பவள விழாவைக் கடந்து நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புத்தெழுச்சி அளித்து, அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளைப் பெறும் வகையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட கழக மறுசீரமைப்புக் குழு பல்வேறு பரிந்துரைகளை தலைமைக் கழகத்திடம் வழங்கியுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் குறித்து கழகத் தலைவர், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்களாக முன்மொழிவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 16-வது கழக அமைப்புத் தேர்தலை நடத்தி, நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் பின்வரும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்கள் கழகத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 1
கிளைக் கழகங்களே திமுகவின் வலுவான கட்டமைப்புக்கான அடித்தளமாக உள்ளன. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளே கிளைச் செயலாளர்கள்.
கழக நிர்வாகக் கட்டமைப்பில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் வகையிலும், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும், கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2
தற்போது மாநகரங்களில் அடிப்படை கட்டமைப்பாக வட்டக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது.
அதன்படி, மாநகரப் பகுதிகளில் புதிய நிர்வாகப் பிரிவாக 'கிளைக் கழகம்' தொடங்கப்பட்டு, 'கிளைச் செயலாளர்' என்ற பொறுப்பு உருவாக்கப்படுகிறது. இந்தப் பொறுப்புக்கு 45 வயதுக்கு மிகாதவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்தக் கிளை அமைப்பு உருவாக்கப்படும். பிற மாநகராட்சிகளிலும் நிர்வாகச் சூழலுக்கு ஏற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
தீர்மானம் 3
நகர்ப்புறங்களில் திமுகவின் நிர்வாகக் கட்டமைப்பு மாநகரம், நகரம், பேரூர்க் கழகம் என இயங்கி வருகிறது. மாநகர, நகர மற்றும் பேரூர்க் கழகங்களின் வலிமையான தூண்களாக வட்டக் கழகங்கள் உள்ளன.
சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்குகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் அவை சராசரியாக 5 ஆயிரம் வாக்குகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
மேலும், மாநகர, நகர, பேரூர் உள்ளிட்ட கழகங்களுக்கான வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அந்தப் பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4
கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட நிர்வாக அமைப்பாக பேரூராட்சிகள் உள்ளன. பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5
மாநகரங்களில் கழகத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக பகுதிக் கழகங்கள் விளங்குகின்றன. சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களில் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களின் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. அவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பில் பணியாற்ற முடியும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6
இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகி வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது அவசியமாகிறது.
அதன்படி, சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் நகரச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 7
மாவட்டக் கழகங்கள் எனும் வலிமையான அமைப்புகளைத் தாங்கி நிற்கும் முக்கிய தூண்களாக ஒன்றியக் கழகங்கள் உள்ளன. அவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில், சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது.
மேலும், ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 8
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரத்தநாளங்களாக மாவட்டக் கழகங்கள் விளங்குகின்றன. தற்போது திமுகவில் 77 மாவட்டக் கழகங்கள் உள்ளன.
வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறு பிரித்த பின்னர், ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சினால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.
கழக நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில், மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் மாவட்டக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
இதன்படி, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள் 110 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 'மாநகரச் செயலாளர்' என்ற பொறுப்பின் தேவை இல்லை என்பதையும் இந்தக் கூட்டம் கருத்தில் கொள்கிறது.
புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறும் தொகுதிகளை கழகத் தலைவர் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 9
கழகத் தலைவர் புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களை அறிவித்த பிறகு, அனைத்து மாவட்டக் கழகங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில், தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகள் 15 நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மீண்டும் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, ஒப்புதல் பெற்று, இறுதிப் பட்டியலை விரைந்து தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire