பயன்படுத்தப்படும் முறையிலேயே தங்கியிருக்கிறது அதிகாரத்தின் மீதான சோதனை
23 ஆவணி 2026 ஞாயிறு 16:47 | பார்வைகள் : 503
அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை அரசியலமைப்பு மாற்றத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை பொதுமக்களின் கவனத்தின் மையப் புள்ளிக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த முன்மொழிவைச் சுற்றியுள்ள சர்ச்சை, நீதிபதிகளுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சேவை நீடிப்பு வழங்குவது என்ற கேள்வியை விட பெரியதாக மாறியுள்ளது. புதிய அரசாங்கம் இலங்கையை எந்தத் திசையில் கொண்டு செல்கிறது என்பது பற்றிய மிக அடிப்படை கேள்வியை இது எழுப்பியுள்ளது.
புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் வரை, தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி அதன் 2024 தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை ஒரு வருடத்திற்குள் நடத்துவதாகவும், தற்போதைய அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அது உறுதியளித்தது.
எனவே, ஒரு திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற முடியுமா என்பதற்கும் அப்பால் அரசாங்கம் யோசிக்க வேண்டும். மேலும் தனது பெரும்பான்மையை அது பயன்படுத்தும் விதம் மக்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கம் விரைவில் பாராளுமன்றத்தில் விவாதிக்கவிருக்கும் 22 வது திருத்தம் குறித்து இலங்கைக்கு வெளியிலிருந்தும் ஒரு முக்கியமான எச்சரிக்கை வந்துள்ளது. நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட், முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறைப்படி தனது கவலைகளை வெளிபடுத்தியிருக்கிறார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சுதந்திரத்தையும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும் குறிப்பாக தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளுக்கு இந்த மாற்றத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இதையும் ஏனைய சர்வதேச அவதானிப்புகளையும் தீவிர அக்கறையுடன் கருத்தில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் எதிர்பாராத தலையீடு தனியான முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாற்றம் ஏன் அவசியம் என்பதையும் தற்போதைய நீதிபதிகளுக்கு இது ஏன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் தெளிவாக விளக்க வேண்டும்.
இலங்கை மக்கள் பல தசாப்தகால ஊழல், தண்டனையிலிருந்து விலக்கு பெறும் நிலை (Impunity) அரசியல் வன்முறை மற்றும் அரசு அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை கடந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாட்டைச் சுத்தப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதியை உந்தித்தள்ளும் உணர்வை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அரசாங்கத்தின் நோக்கங்களையும் அது எடுக்கும் முடிவுகள் மற்றும் தரும் தீர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் அரசாங்கத்தை மதிப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதகரிக்கும்
மாற்றப்படும் விதிகளை, பாதிக்கப்படும் நிறுவனங்களை மற்றும் உருவாக்கப்படும் முன்னுதாரணங்களை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க முற்படும். ஆனால், இங்கேயும் கூட அரசாங்கம் தேசிய வாக்காளர்களின் சகிப்புத்தன்மையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நடத்திய சமீபத்திய "நாட்டின் மனநிலை" (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், அரசாங்கத்தின் ஒப்புதல் விகிதம் 2026 பெப்ரவரியில் 65 சதவீதமாக இருந்தது, ஜூலை மாதத்தில் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொருளாதாரம் முன்னேறி வருவதாக நம்புபவர்களின் விகிதம் 64 சதவீதத்திலிருந்து 41.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இது நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறிய 40.29 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.
தற்போது, கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதைக் காணமுடிகிறது. இது உண்மையிலேயே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக உள்ளது. நீண்டகாலமாகப் புதைக்கப்பட்ட சான்றுகள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. கடந்த தசாப்தங்களில் தண்டிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சூழலை அனுபவித்து வாழ்ந்த இலங்கையர்கள், என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதில் அரசாங்கத்திற்கு இருக்கும் உறுதியை அறிந்துகொள்வர். அவர்கள் வரலாற்றை அறிவர்.
அத்துடன், தீர்க்கப்படாமல் எஞ்சியிருக்கும் காணாமல்போதல்கள், கொலைகள், ஊழல் மோசடிகள் மற்றும் அரசியல் தலையீடுகளை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். ஆனால், அவ்வளவிலான உள்நாட்டு அல்லது தேசிய அளவிலான புரிதலை சர்வதேச நிபுணர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களில் பலர் குறுகிய காலத்திற்கு மட்டுமே பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் தங்கள் முன்னால் உள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டங்களையே பார்ப்பார்கள். விசேட அறிக்கையாளரின் தலையீடு இந்த அணுகுமுறையை விளக்குகிறது. முன்மொழியப்பட்ட மாற்றம், நீதித்துறை சுதந்திரத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புகளுக்கு அமைவாக உள்ளதா என்று அவர் கேட்கிறார்.
இலங்கையின் நீண்டகால சர்வதேச பங்காளிகள் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை வரவேற்றுள்ளனர் என்பது சாதகமான இரு அம்சமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் மிகச் சமீபத்திய மதிப்பாய்வு, செயல்பாடுகள் பொதுவாக வலுவாக உள்ளதாக விவரித்ததுடன், ஆளுகை மற்றும் ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய மதிப்பாய்வு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கும் இணையவெளி பாதுகாப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வதற்கும், குடிமக்கள் வெளியை (Civic space ) பாதுகாப்பதற்கும், பொறுப்புக் கூறலை வலுப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் குறிப்பிடுகிறது.
ஆனால், நடைமுறைப்படுத்தல் மந்தமாகவும் சீரற்றதாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆளுகை பற்றிய சர்வதேசக் கவலையை இரண்டாம் பட்சமான விடயமாகக் கருதுவது அரசாங்கம் செய்யும் தவறாக அமையும். உதவி, வர்த்தகம், முதலீடு, கடன் மறுசீரமைப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் சந்தைகளுக்கான அணுகுமுறை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இலங்கைக்கு சர்வதேச சமூகம் தேவைப்படுகிறது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் கணிசமான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் தற்போதைய ஒப்பந்தம் 2026 ஆண்டில் முடிவடையும் போது இலங்கை மீண்டும் விண்ணப்பிக்க உத்தேசித்துள்ளது. இதனால்தான் 22 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கம் குறிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சர்வதேச விமர்சனங்களை வெளிநாட்டுத் தலையீடு என்று நிராகரிப்பதாக இல்லாமல், அதனுடன் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் ஈடுபடுவதே அரசாங்கத்தின் வலுவான பதிலளிப்பாக இருக்கும்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கம் அதன் விருப்பத்தைத் திணிக்க முடியும், ஆனால் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் ஒரு அரசாங்கம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சகர்களைச் சமாதானப்படுத்தவும் சீர்திருத்தத்திற்கான தனது அர்ப்பணிப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் , இணையவெளி பாதுகாப்புச் சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களிடமிருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களே சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டியுள்ள முதன்மையான பிரச்சினைகளாகும். அவை அனைத்தும் அரசு அதிகாரம் மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கு இடையிலான சமநிலையைக் கையாள்பவையாகும்.
நாட்டைச் சுத்தப்படுத்துவதற்கான இடர்மிகு பணிகளைச் சுட்டிக்காட்டி, அதிகாரங்களை மேலும் மையப்படுத்துவதை நியாயப்படுத்த ஒரு உந்துதல் இருக்கலாம். அரசாங்கம் ஆழமாக வேரூன்றிய ஊழலையும் குற்றச்செயல்களையும் எதிர்கொள்கிறது, மேலும் தீர்க்கமான நடவடிக்கைக்கு அதிகாரம் தேவை என்று நியாயமாக வாதிடலாம். ஆனால் ஆபத்து என்னவென்றால், கடந்த காலத்தைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் வழிகள், சிக்கல்களை உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் சில பழக்கங்களையே மீண்டும் உருவாக்கக்கூடும்.
இணையவெளி பாதுகாப்புச் சட்டத்தை தற்போதைய வடிவத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்று ஜனதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின்தேர்தல் விஞ்ஞாபனமும் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பரவலாக்குவதாகவும், மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது. இருப்பினும், மாகாண சபைகள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமலேயே தொடர்கின்றன. இந்த வாக்குறுதிகள் இப்போது நிஜமாக வேண்டும்.
முன்மொழியப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் (NGO) பதிவு மற்றும் மேற்பார்வைச் சட்டத்தின் மறுபிரவேசம் அதே கவலையை ஏறடுத்துகிறது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தேவைகளுக்கு ஏற்ப, கட்டுப்பாடுளை வலுப்படுத்தவும், பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் ஆயுதப் பெருக்க நிதியுதவி ஆகியவற்றின் அபாயங்களைக் குறைக்கவும் இந்தச் சட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இச்சட்டம் முதலில் 2018 ஆம் ஆண்டில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழும், மீண்டும் 2020 ஆண்டில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழும் தோன்றியது.
ஆனால், கட்டுப்பாடுகள் அரசசார்பற்ற நிறுவனங்களை இலக்கு வைப்பதாக மாறக்கூடாது. வரைவுச் சட்டம், அனைத்து தன்னார்வ அமைப்புக்களையும் உள்ளடக்கிய அதன் பரந்த வரையறையினாலும், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மீது அரசுக்கு வழங்குவது போலத் தோன்றும் விரிவான அதிகாரங்களினாலும் கவலையை எழுப்பியுள்ளது. ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு நியாயமானதும் அவசியமானதுமாகும். ஆனால், தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒரு நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் புதுப்பிக்கத்தக்க அரச உரிமங்கள் மூலம் இயங்க வேண்டும் என்று கோருவது, அத்துடன் அபராதங்களை விதிக்க அல்லது அமைப்புகளை இடைநிறுத்த விரிவான அதிகாரங்களைக் கொண்டிருப்பது, சிவில் நடவடிக்கைகளில் ஒரு தயக்கமான அல்லது பயமுறுத்தும் சூழலை உருவாக்கக்கூடும்.
கடந்த வாரம் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, ஈடுபாட்டிற்கான ஒரு ஊக்கமளிக்கும் உதாரணத்தை வழங்குகிறது. சிவில் சமூகப் பிரதிநிதிகள் வரைவுச் சட்டம் குறித்துத் தங்கள் கவலைகளை எழுப்பினர், பொதுச்செயலாளர் அதைக் கேட்டு, அரசாங்கத் தலைமையிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இந்த உரையாடல் சினேகப்பூர்வமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் அமைந்தது. இவ்வாறான செவிமடுக்கும் மனப்பான்மைதான் பரவலாகத் தேவைப்படுகிறது.
இலங்கை இன்று மீட்சி மற்றும் சுய-நிலையான பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. ஆனால் சாதனைகள் இன்னும் பாதிக்கப்படக்கூடியவையாகவே உள்ளன. இலங்கைக்கு உள்நாட்டு சட்டபூர்வ தன்மையும் சர்வதேச நம்பிக்கையும் தேவை. குற்றச் செயல்கள் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், தனது திட்டத்திற்கு வரும் பலமான எதிர்ப்பை எதிர்கொள்ளும் அதே வேளையில், கடந்த காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்க வேண்டும்.
அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இணையவெளி பாதுகாப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்தல், மக்களால் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதிகளிடம்் மாகாண ஆட்சியை மீணடும் ஒப்படைத்தல் , சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு சிவில் சமூகம் பங்களிப்பதற்கான இடத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை இது குறிக்கிறது. எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் கவலைகளுக்குச் செவிசாய்த்து, நீதியான மற்றும் நேர்மையான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அரசாங்கம் அவர்களை வெல்ல வேண்டும். அரசாங்கத்தின் ஜனநாயக உறுதிப்பாட்டிற்கான சோதனை, அது தனது அதிகாரத்தை எவ்வளவு பொறுப்புடன் பயன்படுத்தத் தீர்மானிக்கிறது என்பதில்தான் உள்ளது.
நன்றி வீரகேசரி



