Paristamil Navigation Paristamil advert login

2029ல் லோக்சபாவுடன் 22 மாநில சட்டசபை தேர்தல்?

2029ல் லோக்சபாவுடன் 22 மாநில சட்டசபை தேர்தல்?

24 ஆவணி 2026 திங்கள் 13:48 | பார்வைகள் : 139


2029-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலையும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய இந்த குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இதையடுத்து, 2024-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியலமைப்பின் 129-வது திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அது பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, அந்த குழுவின் தலைவராக ராஜஸ்தானின் பாலி தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டார்.

பாராளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டு வருகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் கூட்டுக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படுகிறது.

ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலையும் சந்தித்து வருகின்றன.

அதிகாரப்பூர்வ மசோதாக்களின் அடிப்படையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை முதல் கட்டமாக 2034-ம் ஆண்டு முதல் முழுமையாக தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், 2029-ம் ஆண்டிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 22 மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பல மாநிலங்களின் தற்போதைய சட்டசபை பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். சட்டசபைகள் கலைக்கப்பட்ட பின்னர், 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் கமிஷன் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

தற்போதுள்ள மசோதாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவை விட முன்னதாகவே ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த முடியுமா என்ற கேள்விக்கு, பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி. சவுத்ரி கூறியதாவது:

“இது மாநில முதல்வர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்த விவகாரம் குழுவின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. சில மாநில பா.ஜ.க. முதல்வர்கள் ஏற்கனவே இதுபோன்ற திட்டத்திற்கு தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கோவா, உத்தராகண்ட், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய 4 மாநில முதல்வர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல்களும் நடைபெற்றால், கோவா, குஜராத், மணிப்பூர், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் குறையும்.

அதேபோல், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் குறையும்.
 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்