Paristamil Navigation Paristamil advert login

தமிழக வளர்ச்சி 10 ஆண்டு பின்னடைவு: அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக வளர்ச்சி 10 ஆண்டு பின்னடைவு: அண்ணாமலை எச்சரிக்கை

25 ஆவணி 2026 செவ்வாய் 06:36 | பார்வைகள் : 123


பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய், சென்னையின் 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், தமிழகத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. எனவே, மாற்று இடத்தை முன்கூட்டியே பரிந்துரை செய்திருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவு செய்தாலும், ஒரு இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசு மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்று, டெண்டர் கோரி, நிலம் கையகப்படுத்தி, தேவையான உரிமங்களைப் பெற்று விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதற்கிடையில், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளும் நிலை உருவாகியுள்ளது.

அதேபோல், தற்போது செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்திலும் போதுமான இடவசதி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹைதராபாத் 5,500 ஏக்கர், டெல்லி 5,100 ஏக்கர், பெங்களூரு 4,000 ஏக்கர், நவி மும்பை 2,866 ஏக்கர் என மிகப்பெரிய பரப்பளவில் விமான நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால், சென்னை விமான நிலையம் வெறும் 1,300 ஏக்கர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்த சென்னை, தற்போது அதிக அளவில் பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் 5வது இடத்தில் உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேகள் மற்றும் ஏரோ பிரிட்ஜ்கள் இல்லாததால், ‘கோட் எப்’ விமான நிலையமாக வகைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பெரிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை உள்ளது.

எனவே, சென்னைக்கான 2வது விமான நிலையத்துக்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கட்சிகள் வரலாம், போகலாம். அரசுகள் மாறலாம். ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, மோசமான கட்டமைப்புகளுடன் கூடிய விமான நிலையம் நமக்கு இருக்கக் கூடாது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு தேவைப்படும் 5,746 ஏக்கர் நிலத்தில், தமிழக அரசு 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலத்தை வைத்து அரசு என்ன செய்யப் போகிறது?

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்