2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம்: தமிழக அரசுக்கு 3 ஆண்டுகளில் தேர்தல் ஆபத்து?
26 ஆவணி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 186
2029-ம் ஆண்டு ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் 2026-ல் ஆட்சிக்கு வரும் த.வெ.க. அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளிலேயே முடிவடையும் சூழல் ஏற்படலாம்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் எத்தனை?
இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் - நிக்கோபார், சத்தீஸ்கர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இதேபோல், நாடு முழுவதும் 4,123 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. குறைந்தபட்சமாக புதுச்சேரி மற்றும் சிக்கிமில் தலா 32 தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
எதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’?
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் பொதுவாக 5 ஆண்டுகளாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. ஆனால், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையும் காலத்துக்கு ஏற்ப தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இதனால் ஏற்படும் தேர்தல் செலவுகளை குறைப்பது, நிர்வாகத் திறனை மேம்படுத்துவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலங்களில் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி, அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு 129-வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது.
பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை
இது அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ.க. மக்களவை எம்.பி. பி.பி.சவுத்ரி, இந்தக் கூட்டுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கூட்டுக்குழு உறுப்பினர்கள் சட்ட நிபுணர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம்
இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. எனவே, இந்த யோசனையை கைவிட வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பலமுறை ஆலோசனை நடத்திவிட்டோம். அவர்களில் 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தால், இந்தத் திட்டத்தை 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலேயே அமல்படுத்தலாம்” என்று கூறினார்.
த.வெ.க. அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடியுமா?
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்பட்டால், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்த தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிவடையும் நிலை ஏற்படும்.
அதாவது, தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் த.வெ.க. அரசின் பதவிக்காலமும் 3 ஆண்டுகளிலேயே முடிவடையும் ஆபத்து ஏற்படலாம்.
இதேபோல், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ஆட்சிக்கு வருபவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளில் முடிவடையும் சூழல் ஏற்படும்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் எதிர்க்குமா?
அதேபோல், 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சிக்கு வருபவர்களின் பதவிக்காலம் ஒரே ஆண்டில் முடிவடையும் நிலை ஏற்படலாம்.
இதுபோன்ற சூழல்கள் இருப்பதால், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் எதிர்க்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இருப்பினும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தலான 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire