Paristamil Navigation Paristamil advert login

தலைமறைவு குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

தலைமறைவு குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

27 ஆவணி 2026 வியாழன் 06:50 | பார்வைகள் : 153


தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி., வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை என்பவரின் மகனை கொலை செய்ததாக, சிவசபரி உள்ளிட்ட சிலர் மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. ஜாமினில் வெளியே வந்த சிவசபரி, 2024 ஆகஸ்ட் 30 முதல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 2026 மார்ச் 27ல் சிறப்பு படை போலீசார் சிவசபரியை கைது செய்தனர். கீழமை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

**அரசு தரப்பு:** கடந்த 2019ல் நடைபெற்ற இந்த கொலை வழக்கில், அதே ஆண்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும், எதிரிகள் அடுத்தடுத்து தலைமறைவானதால் விசாரணை தாமதமாகி வருகிறது. மனுதாரரும் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து, பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 7வது எதிரி, 2021 முதல் தலைமறைவாக உள்ளார். இதனால் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

**நீதிபதி:** குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 82ன் கீழ், குற்றவாளிகள் சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் ஆஜராகவில்லை என்றால், பிரிவு 83ன் கீழ் அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.

போலீசார் இந்த நடைமுறையை முறையாகப் பின்பற்றினால், நீண்டகாலம் பிடிவாரன்ட் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க முடியும். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் எதிரியை கைது செய்ய முடியவில்லை என்றால், மாவட்ட எஸ்.பி., இது தொடர்பாக ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஓராண்டு கடந்தும் எதிரியை கைது செய்ய முடியாத நிலையில், உடனடியாக அவரது சொத்துகளை முடக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி., உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

மனுதாரர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளதால், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்