Paristamil Navigation Paristamil advert login

சந்திரபாபு - பவன் கல்யாண் இடையே புகைச்சல்!!

சந்திரபாபு - பவன் கல்யாண் இடையே புகைச்சல்!!

27 ஆவணி 2026 வியாழன் 08:58 | பார்வைகள் : 125


ஆந்திராவில் அதிகாரப் போட்டி காரணமாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், நடிகரும் துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆளும் கூட்டணிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார்.

அவரது கட்சிக்கு ஆந்திர சட்டசபையில் 21 எம்.எல்.ஏ.,க்களும், லோக்சபாவில் 2 எம்.பி.,க்களும் உள்ளனர். தேர்தல்களில் 100 சதவீத வெற்றி என்ற சாதனையையும் பவன் கல்யாண் பெற்றுள்ளார். இதனால் ஆந்திர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் உருவெடுத்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, தனி அதிகார மையமாக செயல்படுவதை பவன் கல்யாண் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

### அதிருப்தி

இதுதொடர்பான தனது அதிருப்தியை பவன் கல்யாண் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், தனது நடவடிக்கைகள் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு உணர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 4 அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் சட்டசபை கூட்டங்களில் பங்கேற்காமல் பவன் கல்யாண் புறக்கணித்தார். தலைநகர் அமராவதி மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் முக்கிய சாலை திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அந்த விழாவை கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த அதே நாளில், தனது பொறுப்பில் உள்ள வனத்துறை ஏற்பாடு செய்த யானைகள் தொடர்பான விழாவில் பங்கேற்பதற்காக பவன் கல்யாண் விசாகப்பட்டினம் சென்றிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே, பவன் கல்யாணின் மூத்த சகோதரரும் நடிகருமான நாக பாபுவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி அளித்திருந்தார்.

ஆனால், ஜாதி மற்றும் பிராந்திய கணக்குகள் காரணமாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடு மீது பவன் கல்யாண் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வரிடம் கூட சம்மதம் பெறாமல், தனது துறையின் கீழ் செயல்படும் 'ஆந்திரா கிரீன்' நிர்வாகக் குழுவின் தலைவராக, கேபினட் அந்தஸ்து கொண்ட பொறுப்பை நாகபாபுவுக்கு பவன் கல்யாண் வழங்கினார்.

### சலசலப்பு

உடல்நிலையை காரணம் காட்டி அரசு பணிகளை புறக்கணிப்பதை பவன் கல்யாண் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஹைதராபாதில் நடைபெறும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் தனி விமானத்தில் செல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பவன் கல்யாணின் இந்த நடவடிக்கைகள் தெலுங்கு தேச கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சியின் நிர்வாகத்துக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், பவன் கல்யாண் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து செயல்பட வேண்டும் என அவரது காபு சமூகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள காபு சமூகத்தினர், இந்த முறை தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற ஜனசேனா திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சலும், காபு சமூகத்தினர் அளித்து வரும் அழுத்தமும் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்