Paristamil Navigation Paristamil advert login

11,000 கி.மீ., ரயில் பாதைகள் 4 வழியாக மாற்றம்! இந்திய ரயில்வே

11,000 கி.மீ., ரயில் பாதைகள் 4 வழியாக மாற்றம்! இந்திய ரயில்வே

27 ஆவணி 2026 வியாழன் 09:03 | பார்வைகள் : 136


இந்தியாவில் ரயில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நாட்டின் முக்கியமான 7 ரயில் வழித்தடங்களை 4 வழிப்பாதைகளாக மாற்றும் பிரம்மாண்ட திட்டத்தை இந்திய ரயில்வே தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

மொத்தம் 11,000 கி.மீ., தொலைவு கொண்ட இந்த வழித்தடங்களில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதன் மூலம், இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

### அதிரடி திட்டம்

இந்தியாவில் உள்ள மொத்த ரயில் பாதைகளில் குறிப்பிட்டுள்ள 7 வழித்தடங்கள் 16 சதவீதப் பகுதியை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், நாட்டின் மொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இந்த வழித்தடங்களில்தான் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, இந்த பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் நிலை உள்ளது. இந்த நெரிசலை குறைக்கும் நோக்கில் ரயில்வே இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

திட்டத்தின் கீழ் இடம்பெறும் 7 முக்கிய வழித்தடங்கள்:

* டில்லி - ஹவுரா
* ஹவுரா - சென்னை
* சென்னை - மும்பை
* மும்பை - டில்லி
* டில்லி - சென்னை
* மும்பை - ஹவுரா
* டில்லி - கவுகாத்தி

### மத்திய அமைச்சர் அறிவிப்பு

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ''சரக்கு போக்குவரத்தை சாலை வழியில் இருந்து ரயில்வேக்கு மாற்றுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியம். தண்டவாளங்களை 4 வழிப்பாதைகளாக மாற்றுவதன் மூலம் ரயில்வேயின் கொள்ளளவு பலமடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் கூடுதல் சரக்கு ரயில்களை இயக்க முடியும்'' என்றார்.

### பயண நேரம் குறையும்

* 4 வழிப்பாதைகள் அமைக்கப்பட்ட பிறகு, பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தனித்தனியாக எந்தவித தடையுமின்றி இயக்க முடியும். இதனால் ரயில்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறையும்.

* தண்டவாளங்களின் கொள்ளளவு அதிகரிப்பதால், பண்டிகை காலங்களிலும் அன்றாட பயணங்களுக்கும் அதிக எண்ணிக்கையில் புதிய ரயில்களை இயக்க முடியும்.

* சிக்னலுக்காக ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் பெருமளவில் மாற வாய்ப்புள்ளது.

தற்போது இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதற்கட்ட விரிவாக்கப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்போது, இந்திய ரயில்வே புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்