Paristamil Navigation Paristamil advert login

ஹிஜாப் விவகாரம்: நீதிமன்ற தலையீட்டுக்கு பா.ஜ., எதிர்ப்பு

ஹிஜாப் விவகாரம்: நீதிமன்ற தலையீட்டுக்கு பா.ஜ., எதிர்ப்பு

27 ஆவணி 2026 வியாழன் 10:09 | பார்வைகள் : 118


பள்ளிகளில் முகத்தை மறைக்கும் துணியான 'ஹிஜாப்' அணிய அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது என்றும், அதற்கான முடிவை பள்ளி நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ., தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பித்த முஸ்லிம் மாணவி, முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது மத ரீதியாக கட்டாயமானது என்பதையோ அல்லது அதை அணிய அனுமதிக்காவிட்டால் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையோ நிரூபிக்க போதுமான ஆதாரங்களை மாணவி சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தது.

மேலும், பள்ளியின் சீருடை தொடர்பான விதிமுறைகளை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகத்துக்கே உள்ளது எனக் கூறி, மாணவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஜபார் இஸ்லாம் நேற்று கூறியதாவது:

இது போன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்தால், அனைத்து மதத்தினரையும் அது பாதிக்கும். இதனால் பல்வேறு சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது.

ஒரு தனிநபர் எந்த உடையை அணிய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கக் கூடாது. சட்டத்தை மீறாத வரையில், ஒவ்வொருவருக்கும் தங்கள் விருப்பப்படி வாழவும், விரும்பிய உடையை அணியவும் உரிமை உள்ளது.

கிராமப்புறங்களில் பெண்கள் முக்காடு அணிவது நமது பண்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. அதே நேரத்தில், பள்ளி என்பது அதிலிருந்து மாறுபட்ட இடமாகும். அங்கு கல்வி பயில வரும் மாணவ, மாணவியர் அனைவரும் கட்டாயமாக ஒரே மாதிரியான சீருடையை அணிய வேண்டும்.

எனவே, பள்ளியில் எந்த உடையை அணிய வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும்; நீதிமன்றங்கள் அல்ல.

இவ்வாறு சையத் ஜபார் இஸ்லாம் கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்