Paristamil Navigation Paristamil advert login

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

28 ஆவணி 2026 வெள்ளி 10:36 | பார்வைகள் : 140


நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக, ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு காத்மாண்டு செல்கிறது. மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் டில்லியில் முகாமிட உள்ளனர்.

திபெத்தில் நேற்று ஏற்பட்ட பிரமாண்ட பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிகளவு தண்ணீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த திடீர் பேரழிவில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். 133 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகியுள்ளனர்.

திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, தலைமைச்செயலர் சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், புதுடில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஒரு குழுவை நேபாளத்திற்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், ஏற்கனவே மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும். மேலும், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையை கண்டறிந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்கும்.

மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் ஆகியோர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கவும், அவர்களை பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

### 49 பேர் மாயம்

இதனிடையே, சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்த தகவல்களை பெறவும், அவர்களுக்கான மீட்புப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்