Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை டிராமா மன்றமாக மாறக்கூடாது: அண்ணாமலை

சட்டசபை டிராமா மன்றமாக மாறக்கூடாது: அண்ணாமலை

28 ஆவணி 2026 வெள்ளி 11:38 | பார்வைகள் : 121


சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது என்றும், மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும் இடமாக இருக்க வேண்டும் என்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

“சட்டசபையை பொறுத்தவரையில், அது டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. சட்டசபை ஆக்கப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் செயல்பட்டு, மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது சட்டசபை நிகழ்வுகளை பார்க்கும்போது, பழைய பஞ்சாயத்துக்களை சட்டசபைக்கு வந்து தீர்ப்பது போல தெரிகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துக்களும் சட்டசபையில் தீர்க்கப்படுகின்றன. அதேபோல், சட்டசபையில் சில உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் பஞ்சாயத்துக்களும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன.

நான் ஏற்கனவே கூறியதைப் போல, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் புதியவர்கள். அவர்களுக்கு இன்னும் நிறைய சட்டசபை அமர்வுகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. அவர்களும் தங்களை வேகமாக வளர்த்துக் கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளிலும் புதிய உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போது தமிழக மக்களுக்கு இருக்கும் அச்சம், சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது என்பதுதான்” என்று அண்ணாமலை கூறினார்.

### திரைப்படங்களுக்கு கடுமையான சென்சார் தேவை

மேலும் அவர் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகளைப் போல சென்சார் போர்டுகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். தற்போதைய திரைப்படங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத பல காட்சிகள் இடம்பெறுகின்றன. எனவே, சில திரைப்படங்களை முழுமையாக சென்சார் செய்ய வேண்டும்.

திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் கூறியதில்லை. பல திரைப்படங்களுக்கு சென்சார் வழங்கப்பட்டிருந்தாலும், மால்களில் உள்ள தியேட்டர்களைத் தவிர்த்து, பல திரையரங்குகளில் அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

சில திரைப்படங்கள் மாணவர் சமுதாயத்தை சீரழிக்கின்றன. எனவே, சென்சார் குறியீடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

### பெண்களை தவறாக சித்தரிக்கக் கூடாது

“பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் ஒருபுறம் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், மறுபுறம் பெண்களை ஆபாசமாகவும், பாலியல் கருவியாகவும் சினிமாவில் காட்சிப்படுத்துகின்றனர்.

இது குறித்து எவ்வளவு பேசினாலும், சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். அது தவறான சித்தரிப்புகளை தொடங்கி வைத்துள்ளது” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்