Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அருகே கார்கள் தீக்கிரை!

கனடாவில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அருகே கார்கள் தீக்கிரை!

28 ஆவணி 2026 வெள்ளி 14:02 | பார்வைகள் : 159


கனடாவின் ஸ்காபுறோ சென்டர் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹித்தின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வியாழக்கிழமை (27)  அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சல்மா சாஹித்தின் காரும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு வாகனமும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தனது வீடு சேதமடையவில்லை என்றும், தானும் தனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சல்மா சாஹித் தெரிவித்துள்ளார்.

“சம்பவத்துக்கான காரணம் குறித்து தற்போது ஊகிக்க விரும்பவில்லை. பொலிஸ் விசாரணையின் முடிவுக்காக காத்திருப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தனது குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், தனது பாதுகாப்பு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது தொகுதி அலுவலகம் அன்றைய தினம் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

டொராண்டோ பொலிஸாரின் தகவலின்படி, சம்பவதினம் அதிகாலை சுமார் 1.20 மணியளவில் பெல்லமி ரோட் நோர்த் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் மொத்தம் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன. எனினும், இந்தச் சம்பவத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஏற்பட்ட தீக்கும் தொடர்பு இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா காட்சிகளை சேகரித்து வருவதுடன், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் தகவல்களை பெற்று வருகின்றனர்.

சல்மா சாஹித்தின் அயலவரான விக்டோரியா கொன்ஸ்டான்டெல்லோஸ், அதிகாலை வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக தெரிவித்தார். பின்னர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சல்மா சாஹித்தின் வீட்டின் முன்புறத்தில் தீப்பற்றி எரிவதைக் கண்டதாக அவர் கூறினார்.

மற்றுமொரு அயலவரான நந்த்குமார் சாவா, சம்பவத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளை ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார். அந்தக் காட்சிகளில் ஒருவர் கையில் கொள்கலனுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்று, வாகனங்கள் மீது திரவத்தை ஊற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் முதலில் ஒரு வாகனத்துக்கு தீ வைத்த பின்னர், மற்றொரு வாகனத்தை நோக்கிச் சென்று தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தீவைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவத்தின்போது தங்களது குடும்பத்தினர் மிகவும் அச்சமடைந்ததாக சாவா தெரிவித்தார். குறிப்பாக, தனது பிள்ளைகள் அச்சம் காரணமாக உறங்க முடியாமல் அழுததாகவும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டு முதல் ஸ்காபுறோ சென்டர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் சல்மா சாஹித், தற்போது கனேடிய பாராளுமன்றத்தின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், கனடா – சீனா சட்டமன்ற சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து தனது பாதுகாப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கனேடிய பிரதமர் மார்க் கார்னி, சல்மா சாஹித்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதியடைந்ததாகவும், இந்த சம்பவம் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் டொராண்டோ பொலிஸாரை தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்