Paristamil Navigation Paristamil advert login

விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது: செங்கோட்டையன்

விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது: செங்கோட்டையன்

29 ஆவணி 2026 சனி 06:36 | பார்வைகள் : 108


வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றும், விவசாய நிலங்களை எடுக்காமல் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் நடைபெற்ற விவாதம்:

அதிமுக - பாலகிருஷ்ணரெட்டி:
“ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓசூரில் ஏற்கனவே அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கியுள்ளனர்.

அங்குள்ள தனியார் விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூரில் 80 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி விமான நிலையத் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. அதேபோல், ஓசூர் விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்:
“உறுப்பினர்கள் சார்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. விவசாய நிலங்களை எடுக்காமல் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது” என்றார்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

ராசி மணல் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:

“கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தமிழகம் எதிர்த்து வருகிறது. ஆனால், எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும் போதாது. அதற்கு மாற்று நடவடிக்கையாக ராசி மணல் அணை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக எல்லைப் பகுதியான ஒகேனக்கல் அருகே காவிரியின் குறுக்கே ராசிமணல் அணை மற்றும் நீர்மின் திட்டத்தை காமராஜர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் எம்ஜிஆர் ஆட்சியிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகத்திற்கு அதிக பயன் கிடைக்கும்” என்றார்.

இவ்வாறு பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்