Paristamil Navigation Paristamil advert login

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

29 ஆவணி 2026 சனி 07:23 | பார்வைகள் : 112


நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடலங்கள் சுமார் 200 கி.மீ. தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உத்தரபிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டை பெரிதும் பாதித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கானோர் பெருவெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த பேரழிவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் துயரத்தில் உள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் சடலங்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேபாளத்தின் ரசுவாகதி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல்வேறு இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 7 சடலங்கள் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேரழிவு ஏற்பட்ட இமயமலைப் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரம் கீழ்நோக்கி வெள்ளநீர் பாய்ந்தபோது, இந்த சடலங்களும் அதில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மகாராஜ்கஞ்ச் கலெக்டர் கூறுகையில், “நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்கிருந்து அடித்துவரப்பட்ட சடலங்களாக இவை இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

நேபாளத்தில் பாயும் நாராயணி ஆறு, இந்தியாவுக்குள் நுழைந்ததும் கண்டக் நதியாக மாறுகிறது. வெள்ளநீர் தெற்கு திசையை நோக்கி பாய்ந்தபோது, திரிசூலி ஆற்றைக் கடந்து, பின்னர் நாராயணி ஆற்றின் வழியாகச் சென்று, இறுதியில் எல்லையை கடந்து இந்தியாவுக்குள் புகுந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்