Paristamil Navigation Paristamil advert login

ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்: அமெரிக்க தூதர் தகவல்

ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்: அமெரிக்க தூதர் தகவல்

29 ஆவணி 2026 சனி 08:41 | பார்வைகள் : 198


அமெரிக்காவில் தயாரிக்கப்படும், தோளில் வைத்து ஏவக்கூடிய ‘ஜாவலின்’ பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட பதிவு:

“போர்க்களத்தில் தனது செயல்திறனை நிரூபித்துள்ள ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு அமைப்பை எங்களிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்கா - இந்தியா இடையிலான ராணுவ உறவில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். மேலும், கூட்டு தயாரிப்புக்கான வாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால கொள்முதல் நடைமுறையின் கீழ் ஜாவலின் ஏவுகணைகளை வாங்குவதற்கான ‘விருப்பம் மற்றும் ஏற்பு’ கடிதத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது. வெளிநாட்டு ராணுவ விற்பனை வழிமுறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், நீண்ட மற்றும் சிக்கலான கொள்முதல் நடைமுறைகளை தவிர்த்து, ஆயுதப்படைகள் விரைவாக ஆயுதங்களைப் பெற வழிவகுக்கும்.

அமெரிக்காவின் ‘எப்.ஜி.எம்.-148’ ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதில் இந்தியா காட்டும் ஆர்வம் புதிதல்ல. இதற்கான பேச்சுவார்த்தைகள் 2010-ம் ஆண்டு முதலே நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்களால், உலகின் பிரபலமான பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றான ஜாவலினை கொள்முதல் செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகள் பலமுறை தடைபட்டன.

இந்நிலையில், இந்திய ஆயுதப் படைகளில் ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு சேர்க்கப்படுவது, நாட்டின் ஆயுத பலத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்க்கும்.

சிறப்பம்சங்கள்
* அமெரிக்காவின் ‘ரேதியான்’ மற்றும் ‘லாக்ஹீட் மார்ட்டின்’ நிறுவனங்கள் இணைந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை அமைப்பை தயாரிக்கின்றன.
மனிதர்களால் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த அமைப்பு, ‘ஏவி விட்டு மறந்து விடு’ வகையைச் சேர்ந்தது. அதாவது, ஏவுகணையை செலுத்திய பிறகு, அதை இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்த வேண்டிய அவசியம் இயக்குபவருக்கு இல்லை.
* ரூ.1.70 கோடி மதிப்பிலான இந்த ஏவுகணை அமைப்பு, ஏவப்படுவதற்கு முன்பே அதன் அகச்சிவப்பு சீக்கர் கருவி மூலம் இலக்கின் வெப்ப அடையாளத்தை கண்டறிந்து நிலைநிறுத்திக் கொள்கிறது.
* ஜாவலின் ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சம், பீரங்கிகளின் கவசம் குறைந்த பலத்துடன் இருக்கும் மேல் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும்.
* நவீன பீரங்கிகள் பொதுவாக முன்பக்க தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஏவப்பட்ட பிறகு, ஜாவலின் ஏவுகணை 492 அடி உயரத்திற்கு சென்று, பின்னர் மேலிருந்து இலக்கை நோக்கி செங்குத்தாக பாய்கிறது.
* இது 15,584 அடி தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
* ஒரு போர் பீரங்கியின் விலை ரூ.38 கோடியாகும். தோளில் ஜாவலின் ஏவுகணை அமைப்பை சுமந்து செல்லும் ஒரு வீரர், அந்த பீரங்கியை 15 வினாடிகளிலேயே அழிக்க முடியும். இதன் காரணமாக, எப்.ஜி.எம்.-148 ஜாவலின் அமைப்பு 21-ம் நூற்றாண்டின் மிகவும் விரும்பப்படும் ஆயுதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்