Paristamil Navigation Paristamil advert login

திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

29 ஆவணி 2026 சனி 10:51 | பார்வைகள் : 118


நிர்வாக வசதிக்காக திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தி, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“திமுக என்ற பேரியக்கம், கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி நடைபெற்ற கட்சித் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், நிர்வாகச் சீரமைப்புக்கு தேவையான மிக முக்கியமான முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை கட்சி அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 16-வது கட்சி அமைப்புத் தேர்தலை நடத்தவும், பல்வேறு அமைப்புரீதியான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் மாவட்டக் கழகங்கள் தொடர்பான தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும்.

அதன்படி, தற்போது உள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுக்கும் அதிகாரம் கட்சித் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கட்சி மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், கட்சி முன்னணியினருடன் கலந்தாலோசித்தும், தமிழகத்தில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பிரித்து அறிவிக்கிறேன்.

இதில், அதிகமான மக்கள் தொகையை கொண்டிருப்பதால் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களில், தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்ட வேண்டும். மேலும், கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்