நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டில்லி பயணம்
29 ஆவணி 2026 சனி 04:04 | பார்வைகள் : 135
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்காக, முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் நேற்று டில்லி சென்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஏராளமான தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கைலாஷ் யாத்திரைக்காக தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் இரண்டு குழுக்களாக நேபாளத்திற்கு சென்றுள்ளனர். முதல் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரும் என மொத்தம் 57 பேர் இடம்பெற்றிருந்தனர். இரண்டாவது குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 49 பேர் சென்றிருந்தனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்கும், தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்களை தொடர்பு கொள்வதற்கும் வசதியாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, மத்திய வெளியுறவுத் துறை, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழர்களை மீட்கும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை கமிஷனர் ஆஷிஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் அயலக தமிழர் நலத்துறை இயக்குனர் சதீஷ் ஆகியோர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட உள்ளனர்.
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்குவதுடன், அவர்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறியதாவது:
நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வாகனங்கள் செல்லும் 35 பாலங்களும், 45 தொங்கு பாலங்களும் ஒரே நொடியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு 40 கி.மீ. சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு குழுக்களாக 103 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். இதில் சென்னை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் 20 பேர் அங்குள்ள ஆயுதப்படை போலீசாரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மாற்று வழியாக தரை மார்க்கத்தில் மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் டில்லியில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 937 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைவரையும் மீட்டு அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் முடிவு மாற்றம்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளிக்க முயன்றார்.
இதற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதலில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதித்துவிட்டு, பின்னர் அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் 10 நிமிடங்களுக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் பிரபாகர், “கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில், அப்போதைய முதல்வர், ‘நான் பேசிய பின் கேள்வி கேளுங்கள்’ என்று கூறினார். அத்தகைய மரபு சபையில் பின்பற்றப்பட்டுள்ளது” என்றார்.
அதன்பிறகும் சபாநாயகரின் முடிவை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். அப்போது எழுந்த அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை பேச சபாநாயகர் அழைத்தார். இதன் மூலம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
49 பேர் கதி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ‘சூப்பர் யாத்திரா’ ஏஜென்சி மூலம் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் நேபாளம் சென்றனர். இந்தக் குழுவினர் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கினர்.
அவர்களில் ஒரு சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த 20 பேர் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள இரண்டு வாகனங்களில் சென்ற 37 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.
இதேபோல், தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் 49 பேர் கடந்த 14-ம் தேதி விமானம் மூலம் மும்பை, காத்மாண்டு வழியாக சீனா எல்லையில் உள்ள கைலாஷ் சென்றனர்.
இந்த 49 பேரும் குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, சிங்கபெருமாள் கோவில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 22 ஆண்களும் 27 பெண்களும் உள்ளனர்.
யாத்திரையை முடித்துவிட்டு நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் ‘இமிகிரேஷன்’ நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் குடியேற்ற அலுவலக கட்டடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு இருந்த தமிழக யாத்ரீகர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 57 பேரில், மயிலாடுதுறை செட்டி தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட 7 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி, புஷ்பலதா ஆகியோர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட மற்ற 4 பேரின் நிலை குறித்து தகவல் தெரியவில்லை என கூறப்படுகிறது.
288 இந்தியர்கள் மாயம்; மீட்க அரசு தீவிரம்
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 288 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 73 பேர் திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்களை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், தமிழகத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 37 மற்றும் 49 பேர் கொண்ட இரு குழுக்களில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்ற 32 பேர், கேரளாவைச் சேர்ந்த 33 பேர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நேபாளம் சென்ற 61 பேர் கொண்ட குழுவினரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திபெத் எல்லையில் சிக்கித் தவிக்கும் 200 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
முதற்கட்டமாக நேற்று முன்தினம் 10 டன் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு நேபாளத்திற்கு அனுப்பியது. இரண்டாம் கட்டமாக நேற்று 37.5 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவை ராணுவ விமானம் மூலம் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire