நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் 21 பேர் மீட்பு! சென்னை வந்தடைந்தனர்
29 ஆவணி 2026 சனி 05:20 | பார்வைகள் : 128
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு, நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். அதே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட தமிழர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
**ஆலோசனை**
இந்த பேரிடர் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் நேற்று முன்தினம் டில்லி சென்றனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு, மத்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியது.
மேலும், டில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அனுப்பி, அங்கு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த பயணியரை மீட்பது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, அவர்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை மத்திய அரசுடன் இணைந்து ஒருங்கிணைப்பது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழர்களை மீட்பது தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூதரக அதிகாரிகளின் உதவியுடன், நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில் நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் விமானம் மூலம் டில்லி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
**ஆறுதல்**
டில்லி விமான நிலையத்திற்கு வந்த தமிழக அமைச்சர்கள் குழு, மீட்கப்பட்ட 21 தமிழர்களையும் நேரில் சந்தித்து, நேபாளத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தது. அவர்களுக்கு ஆறுதலும் தைரியமும் தெரிவித்தது.
பின்னர், 21 பேரும் தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர். அதன்பின் நேற்று இரவு விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
**டில்லி விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி:**
நேபாளத்தில் இருந்து டில்லி வந்த 21 தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த மீட்புப் பணிக்கு துணை நின்ற மத்திய அரசு, நேபாள அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு நன்றி.
மீட்கப்பட்ட 21 பேரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அவர்கள் தங்களது பாஸ்போர்ட்டுகளை தவறவிட்டுள்ளனர். முதல்வர் விஜய் உத்தரவின்படி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
**ஆன்மிக பயணம்**
கண் முன்னால் பலர் உயிரிழந்ததை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். 57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து சுமார் 400 பேர் நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பலர் ரயில் மூலமாகவும் நேபாளம் சென்றுள்ளனர்.
மூன்று மாடி உயரத்திற்கு மண் குவிந்துள்ளதால், மீட்புப் பணிகளில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
**114 பேரின் உறவினர்கள் தவிப்பு**
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக, அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 57 பேரையும், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 49 பேரையும் ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
கோவை ஈஷாவில் இருந்து சென்றவர்கள், தனியாக சென்றவர்கள் உள்ளிட்ட மொத்தம் 135 பேரின் உறவினர்கள் சென்னை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளனர்.
இவர்களில் 21 பேர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 114 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை. அவர்களின் உறவினர்களுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
**விரைவில் மூன்றாவது விமானம்**
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தூதரக அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை 21 பேர் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை மொத்தம் 85 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானலை தொடர்பு கொண்டு பேசினேன். இந்தியா சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவரிடம் தெரிவித்தேன்.
'பெய்லி' பாலங்களை நேபாளத்திற்கு அனுப்பி வருகிறோம். மருத்துவக் குழுக்களும் அங்கு அனுப்பப்பட உள்ளன. நிவாரணப் பொருட்களுடன் மூன்றாவது விமானம் விரைவில் நேபாளத்திற்கு புறப்படும்.
– ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,
**சீனா விளக்கம்**
நேபாள வெள்ளம் குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிபுணர்கள், அரசு அமைப்புகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வுகளின்படி, நேபாளத்தின் உயரமான பகுதியில் இருந்த பனிப்பாறை சரிந்ததே இந்த வெள்ளப் பேரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து லஹந்தே ஆற்றில் விழுந்ததால், ஆற்றின் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டிருக்கலாம். பின்னர், நீரின் அழுத்தம் அதிகரித்து அந்த தடுப்பு உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
**பலி எண்ணிக்கை உயர்வு**
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 947க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த பேரிடரில் சிக்கி சீனாவில் 5 பேர் உயிரிழந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 552 ஆக உயர்ந்துள்ளது.
சீனா மற்றும் நேபாளம் வெளியிட்ட தகவல்களின்படி, இரு நாடுகளிலும் சேர்த்து 1,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மூன்றாவது நாளாக நேற்றும் நடைபெற்ற தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை 3,742 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளம் தெரிவித்துள்ளது. இவர்களில் 85 பேர் இந்தியர்கள்.
2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, அந்த நாடு சந்திக்கும் மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது.
இந்நிலையில், திபெத் பகுதியில் உள்ள அணை ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நேபாள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
**வர்த்தகம் பாதிப்பு**
நேபாள வெள்ளப்பெருக்கால் இந்தியா – நேபாளம் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் வழியாக நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து, சாலைகள் சேதமடைந்ததாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் சரக்கு வாகனங்கள் சுமார் 16 கி.மீ., தூரத்திற்கு நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
**உ.பி.,க்கு அடித்து வரப்பட்ட 7 உடல்கள்!**
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 உடல்கள் எல்லையை கடந்து உத்தர பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன.
பேரிடர் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ., தூரம் கீழ்நோக்கி அடித்து வரப்பட்ட இந்த உடல்கள், உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire