Paristamil Navigation Paristamil advert login

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடும் நடவடிக்கை; அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்: பிரதமர் மோடி உறுதி

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடும் நடவடிக்கை; அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்: பிரதமர் மோடி உறுதி

24 ஆடி 2026 வெள்ளி 07:25 | பார்வைகள் : 237


நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான தீர்மானம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்திற்குப் பிறகு கடந்த இரண்டரை மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாகக் கூடாது என்பதே அரசின் மிக முக்கியமான பொறுப்பாக இருந்தது. அதற்காக மத்திய அரசு தனது முழு திறனையும் பயன்படுத்தி, 22 லட்சம் மாணவர்கள் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுத்தது. ஜூலை 19ம் தேதி தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

அதோடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான தீர்மானமும் தயாராகி உள்ளது.

இந்தத் தீர்மானத்தில் விரைவு நீதிமன்றம் அமைப்பதுடன், வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த முன்மொழிவு இன்று(ஜூலை 24) நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை  துவங்கும், பார்லிமென்ட் கூட்ட தொடரில் அந்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.