Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடலோர காவல் படை மீண்டும் நீர்த்தாரை தாக்குதல்

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடலோர காவல் படை மீண்டும் நீர்த்தாரை தாக்குதல்

25 ஆடி 2026 சனி 15:45 | பார்வைகள் : 193


தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளை நோக்கி சீனக் கடலோர காவல் படை கப்பல்கள் மீண்டும் “வாட்டர் கேனான்” (Water Cannon) மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே தென்சீனக் கடல் பகுதிகளுக்கு உரிமை கோருவது தொடர்பாக நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், குறித்த கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்கள் மற்றும் மீனவர் படகுகளை நோக்கி வந்த சீனக் கடலோர காவல் படை கப்பல்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு சீனக் கப்பல் பிலிப்பைன்ஸ் படகிற்கு மிக அருகில் சென்று மோதல் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் மட்டும் சீனா–பிலிப்பைன்ஸ் இடையே இடம்பெறும் மூன்றாவது கடல் மோதல் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் சட்டவிரோதமாக கடற்பகுதிக்குள் நுழைந்ததாக சீனா குற்றம் சுமத்தி வரும் நிலையில், சீனாவின் நடவடிக்கைகள் தேவையற்ற ஆத்திரமூட்டலாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தென்சீனக் கடல் பகுதியில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் நிலைத்தன்மை தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன.