Paristamil Navigation Paristamil advert login

விஷ்மி, ஹர்ஷித்தா குவித்த சதங்களின் உதவியுடன் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை தொடரை சமப்படுத்தியது

விஷ்மி, ஹர்ஷித்தா குவித்த சதங்களின் உதவியுடன் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை தொடரை சமப்படுத்தியது

26 ஆடி 2026 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 131


பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.

விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் சாதனைமிகு இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இலங்கையை வெற்றி அடைய பெரிதும் உதவினர்.

பாகிஸ்தான் மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்ற அபார வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது சமரி அத்தபத்து (1) ஆட்டம் இழந்தார்.

ஆனால், விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 203 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டனர்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இலங்கை ஜோடி ஒன்று பகிர்ந்த முதலாவது  200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் சகல விக்கெட்களுக்குமான இலங்கையின் அதிகபட்ச இணைப்பாட்டமாகவும் இது பதிவானது.

விஷ்மி குணரட்ன 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி  ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

ஹர்ஷித்தா சமரவிக்ரம 100 ஓட்டங்களுடனும் கவிஷா டில்ஹாரி 40 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்க்ளைப் பெற்றது.

சித்ரா ஆமின் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், இலங்கை வெற்றிபெற்றதால் அது பின்னர் வீண் போனது.

அவரைவிட அயேஷா ஸஃபார் 49 ஓட்டங்களையும் முனீபா அலி 45 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.