Paristamil Navigation Paristamil advert login

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் நோர்மண்டி கடற்கரைகள்!!

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் நோர்மண்டி  கடற்கரைகள்!!

26 ஆடி 2026 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 844


யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த விண்ணப்பம், Utah, Omaha, Gold, Juno, Sword என்ற குறியீட்டு பெயர்களால் அறியப்படும் ஐந்து தரையிறங்கும் கடற்கரைகள் மட்டுமன்றி, Pointe du Hoc, Longues-sur-Mer-இல் உள்ள ஜெர்மன் பீரங்கி தளம் மற்றும் Arromanches-les-Bains-இல் அமைந்துள்ள செயற்கை துறைமுகமான Port Mulberry ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

நோர்மண்டி பகுதியில் அமைந்துள்ள தரையிறங்கும் கடற்கரைகள், இன்று யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நீண்டகால முயற்சியின் வெற்றியாகும்.

வடமேற்கு பகுதியில் உள்ள Manche மற்றும் Calvados மாவட்டங்களுக்கு இடையில் சுமார் 80 கிலோமீட்டர் நீளமான கடற்கரையில், 1944 ஜூன் 6 அன்று கூட்டணி நாடுகளின் தரையிறக்கம் நடைபெற்றது. இந்தப் போர், ஐரோப்பாவை நாசி ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதிலும், இரண்டாம் உலகப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்ட தளங்களில், கடுமையான போராட்டங்கள் நடைபெற்ற Pointe du Hoc, Longues-sur-Mer ஜெர்மன் பீரங்கி தளம், மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட மாபெரும் கொன்கிரீட் கட்டமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட Port Mulberry செயற்கை துறைமுகமும் அடங்கும். இது கூட்டணிப் படைகளின் போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகத்திற்கு மிக முக்கிய பங்காற்றியது. 

இத்துடன் பல இராணுவ கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களும் இந்தப் பாரம்பரியத் தொகுப்பின் ஒரு பகுதியாக உள்ளன. நோர்மண்டி பிராந்தியத்தின் தலைவர் Hervé Morin, தென் கொரியாவில் இருந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது:

“இந்தத் தீர்மானம் நமக்கு ஒரு கடமையை அளிக்கிறது. இந்தப் பாரம்பரியச் சொத்தை பாதுகாக்கவும், பேணவும், மேலும் அதிக மதிப்புடன் வளர்த்தெடுக்கவும் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே Mont-Saint-Michel, Chartres பேராலயம், மற்றும் Versailles அரண்மனை போன்ற பிரபலமான இடங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம், அவற்றின் “உலகளாவிய சிறப்புமிக்க மதிப்பு” என்பதைக் குறிப்பிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பதற்கான பொது அதிகாரிகளின் பொறுப்பையும் வலியுறுத்துகிறது.