கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!
28 ஆடி 2026 செவ்வாய் 08:06 | பார்வைகள் : 161
கடந்த 2025ம் ஆண்டு கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் இறந்த 41 பேரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனங்களை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், பலியானவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், '31 பேருக்கு பணி வழங்கியது என்பது அரசின் கொள்கை முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டு வேலை வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்புதல் பெற விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.
கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பஸ்விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா, தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேர் குடும்பத்துக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire