Paristamil Navigation Paristamil advert login

அரசியலில் அடியெடுத்து வைக்கும் தனுஷ்…?

அரசியலில் அடியெடுத்து வைக்கும் தனுஷ்…?

27 ஆடி 2026 திங்கள் 16:45 | பார்வைகள் : 260


நடிகர் தனுஷ் வரும் 28-ம் தேதி தனது 48-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவருக்கு ‘ராயன்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், அதேபோல, ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

அண்மையில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.  தற்போது தனுஷ் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் அவரது சமீபத்திய மேடைப்பேச்சு. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “இங்கு இத்தனை பேர் கூடியிருக்கிறீர்கள். நம்முடைய ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு சரியான நோக்கமும் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்தோம், புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம், என்னை சந்தித்தோம் என இருந்துவிடக்கூடாது. உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை கவனியுங்கள். அவர்களுக்கு பிரச்சினை என்றால் உதவுங்கள்.

மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள். அதற்காக நம் ரசிகர்கள் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நன்றி” என பேசினார் தனுஷ். அவரது இந்த பேச்சு அரசியலுக்கான தொடக்கம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. ரசிகர்கள் மன்றத்துக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தியது, ரசிகர்களிடம் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்க சொல்வது, அரசியல் ஆசைக்கான தொடக்கம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்மையில் தனுஷின் தந்தை  கஸ்தூரி ராஜா, “அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும் இல்லை என்றால் இருக்கட்டும். அதைப்பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டோம். அப்பா என்றால் என்னப்பா அவ்வளவு தான். அதை தாண்டி எதுவும் கேட்க மாட்டோம்" என்றார். தமிழக முதல்வர் விஜய், முதலில் ரசிகர் மன்றத்தை பலப்படுத்தினார். பின்னர் கட்சி தொடங்கினார். தனுஷ் தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை ரசிகர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.