Paristamil Navigation Paristamil advert login

சுவையான ஆட்டுக்கால் பாயா

சுவையான ஆட்டுக்கால் பாயா

27 ஆடி 2026 திங்கள் 16:53 | பார்வைகள் : 146


தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆட்டுக்கால் பாயா. இதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தின் காரணமாக பிரபலமான அசைவ உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆட்டுக்கால் பாயாவை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ஆட்டுக்கால் பாயாவை பிரஷர் குக்கரில் மிக எளிதாக தயாரிக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் வேக வைக்க தேவையானவை :
ஆட்டுக்கால் - 4
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளக்காய் - 4
துருவிய தேங்காய் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் சுட்ட ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு மற்றும் முடி ஆகியவற்றை அகற்றி சுத்தமாக அலசி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது அடுப்பில் குக்கர் வைத்து ஆட்டுக்கால், நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி அதிக தீயில் 6 - 7 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து மேலும் சில நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் போட்டு கொதிக்கவிடவும். இதற்கிடையே அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பிறகு அதில் மீதம் உள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இதை அப்படியே கொதித்து கொண்டிருக்கும் பாயாவில் கொட்டி இறக்கினால் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி...