Paristamil Navigation Paristamil advert login

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை

28 ஆடி 2026 செவ்வாய் 14:27 | பார்வைகள் : 132


மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை வழங்குவதாக சேலத்தில் பெண்களை குறிவைத்து மோசடி நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

இதில் பேசிய நபர், தான் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியதோடு, கொரோனாவை போல் புதுவித நோய் பரவுகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால் வெளிநாடுகளில் உள்ள பலரும், மொட்டை அடித்துக்கொண்டு இந்த நோயில் இருந்து தப்பியுள்ளனர்.

இவ்வாறு மொட்டை அடித்துக்கொள்ளும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ.15,000, ஆண்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

புதுகொட்டாம்பட்டிக்கு 18 டோக்கன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், உங்கள் உறவினர்களுக்கும் இது குறித்து தெரியப்படுத்தலாம்.

கிராமத்திற்கு வரும் போது மொட்டை அடித்து தயாராக இருப்பவர்களுக்கு அதிகாரிகள் பணம் வழங்குவார்கள். பணம் கொடுப்பதற்கு சேர், டேபிள் போட்டு தயாராக இருங்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களை நம்ப வைக்க மொட்டை அடித்துள்ள பெண்கள் மற்றும் பணம் உள்ள புகைப்படங்களை வாட்சப்பில் அனுப்பியுள்ளார்.

இதனை நம்பி, 18 பேர் மொட்டை அடிக்க தயாராக இருந்த நிலையில், 3 பேர் உள்ளூரில் உள்ள மொட்டை அடிக்கும் நபர்களை அழைத்து மொட்டை அடித்து கொண்டனர்.

இதனையடுத்து, செல்போனில் அழைத்த நபருக்கு மீண்டும் அழைத்த போது அவர்களின் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதன்பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண்கள், ஆத்தூர் காவல்நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.