Paristamil Navigation Paristamil advert login

தீவிரமடையும் எல் நினோ - தயார் நிலையில் இருக்க வேண்டும் என இலங்கைக்கு எச்சரிக்கை!

தீவிரமடையும் எல் நினோ - தயார் நிலையில் இருக்க வேண்டும் என இலங்கைக்கு எச்சரிக்கை!

30 ஆடி 2026 வியாழன் 19:15 | பார்வைகள் : 683


எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார். இலங்கைபயணம்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிலைமை இன்னும் பலவீனமான கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் அது மேலும் வலுப்பெறக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே கடுமையான வறட்சி நிலவுவதாகவும், பல நீராதாரங்கள் வறண்டு போயுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிலவும் வறண்ட காலநிலையையும் மீறி எதிர்வரும் பெரும்போ நெற்செய்கை நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வறண்ட காலநிலை சீராகும் வரை பொதுமக்கள் நீரை அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும் என நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எல் நினோ காரணமாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களால் உருவாகும் சாத்தியமான அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவில் நாட்டின் அனர்த்தத் தயார்நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிதியம் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும் குழுவினால் வெளிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டாபெந்தி, எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்து வருவதால் அடுத்த சில மாதங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார். இலங்கைபயணம்

முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாக, நவம்பர் மாதம் அளவில் எல் நினோ உச்சக்கட்டத்தை எட்டும் எனவும் அவர் கூறினார்.

ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அமைச்சர் எச்சரித்தார்.

எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக அரச நிறுவனங்கள் தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாகவும், இது பல நாடுகளை பாதிக்கக்கூடிய உலகளாவிய சுற்றுச்சூழல் நிகழ்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலைமை மோசமடைந்தால் இலங்கை கடுமையான வறட்சியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கைபயணம்

எல் நினோ காரணமாக வாழ்வாதாரம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன, தற்போது நிலவும் எல் நினோ நிலைமை மிகவும் வலுவான நிகழ்வாக மாறும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகளவில் இதுவரை பலவீனமான கட்டத்தில் இருந்த எல் நினோ, தற்போது மிதமான வலிமை கொண்ட கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.