Paristamil Navigation Paristamil advert login

தவெக.,வில் இணைகிறார் மாஜி முதல்வர் பன்னீர்செல்வம்?

தவெக.,வில் இணைகிறார் மாஜி முதல்வர் பன்னீர்செல்வம்?

31 ஆடி 2026 வெள்ளி 12:35 | பார்வைகள் : 589


த.வெ.க.,வில் இணையுமாறு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அவரது மகனும் முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், தி.மு.க.,வில் நீடிக்க, பன்னீர்செல்வம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபை தேர்தலுக்கு முன், த.வெ.க.,வில் இணைந்தார். அவரை தொடர்ந்து, பன்னீர்செல்வமும் த.வெ.க.,வில் இணைய, அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால், தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைந்தார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாகி விட்டார். தி.மு.க.,வில், விரைவில் மறுசீரமைப்பு நடக்க உள்ளது. அப்போது, தென் மண்டலத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., பொறுப்பாளராக பன்னீர்செல்வம் நியமிக்கப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், 'எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளுங்கட்சியான த.வெ.க.,வில் பன்னீர்செல்வம் இணைய வேண்டும்' என, அவரது மகனும் முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் விரும்புகிறார். இது தொடர்பாக, த.வெ.க.,வை சேர்ந்த இரு அமைச்சர்களிடம் ரவீந்திரநாத் தரப்பில் பேச்சு நடந்துள்ளது.

தென் மாவட்டங்களில், முக்குலத்தோர் சமுதாயத்தின் முகமாக பன்னீர்செல்வம் அறியப்படுவதால், அவரை த.வெ.க.,வில் சேர்க்க, முதல்வர் விஜயிடம், அந்த அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:

தன் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியபோது, 'என் மகன், அரசியலில் என்ன முடிவு எடுத்தாலும், அது அவரது சொந்த விருப்பம். நகர செயலரில் இருந்து முதல்வர் வரை, நான் பார்க்காத பதவி இல்லை. தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்து மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்' என்றார்.

சில தினங்களுக்கு முன், த.வெ.க.,வில் இணைய, தன் ஆதரவாளர்களுடன் ரவீந்திரநாத் சென்று விட்டு, பாதியில் திரும்பினார். பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து, தேர்தலுக்கு முன், த.வெ.க.,வில் இணைந்த ரஞ்சித்குமார், தற்போது அமைச்சராக இருக்கிறார்; ஜே.சி.டி.பிரபாகர், சபாநாயகராக உள்ளார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொளத்துார் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களும் த.வெ.க.,வில் இணைந்து விட்டனர். த.வெ.க.,வில் இணைய, பன்னீர்செல்வம் முடிவு எடுத்தால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அவருடன் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.