எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
4 ஆவணி 2026 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 448
பார்லி.,யில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் பல மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், முதலிரண்டு வாரங்களில் லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் குறிப்பிடும்படியான அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதமே நடந்தது. இந்த மசோதா பல மணி நேர விவாதத்துக்கு பின், இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று, லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மாணவர்கள் மீதான தடியடி, பெல்லட் குண்டுகள் பயன்பாடு ஆகியவற்றுக்கு பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன.
இந்த கூச்சல், குழப்பத்துக்கு இடையிலும், லோக்சபாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் அறிமுகம் செய்தார். இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதி நீங்கலாக, 33ல் இருந்து 37 ஆக அதிகரிக்கப்படுகிறது. குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
இது தவிர, வங்கித் துறை மற்றும் இந்திய புள்ளிவிபர நிறுவனத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் இரண்டு மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய புள்ளிவிபரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், இந்திய புள்ளிவிபர நிறுவன மசோதா - 2026ஐ லோக்சபாவில் அறிமுகப்படுத்தினார். இந்திய புள்ளிவிபர நிறுவன சட்டம் - 1959க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
நிர்வாகத்தை வலுப்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், துறையின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. ஜனாதிபதி இந்நிறுவனத்தின் பார்வையாளராக இருப்பார் என்றும், அதன் முதன்மை கொள்கை மற்றும் நிர்வாக அமைப்பாக கவர்னர்கள் குழு செயல்படும் என்றும் மசோதா கூறுகிறது. நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வளாகங்களையும், மையங்களையும் நிறுவவும், பட்டங்கள் மற்றும் கவுரவ பட்டங்களை வழங்கவும் இந்நிறுவனத்திற்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
பதிலளிக்க வேண்டும்!
டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்தும், பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது குறித்தும் அமித் ஷா பார்லி.,யில் பதிலளிக்க வேண்டும். பிரதமரின் மேற்பார்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை இயங்கிய போதும், அங்கு நன்கொடை திருட்டு நடந்துள்ளது. இது குறித்து பார்லி.,யில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்- மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ்
எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
ராஜ்யசபாவில், கடந்த 28ல் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.எஸ்.எம்.இ., எனப்படும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா - 2026, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா, எம்.எஸ்.எம்.இ., பலன்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், தகராறு தீர்வுகளை எளிமைப்படுத்துவதன் மூலமும், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விரைவான பணப் பட்டுவாடாவை உறுதி செய்வதன் மூலமும், தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்க முயல்கிறது. டிஜிட்டல் மயமாக்கல், விரைவான பணம் செலுத்துதல், பயனுள்ள தகராறு தீர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த மசோதா, நாடு முழுதும் உள்ள லட்சக்கணக்கான எம்.எஸ்.எம்.இ.,-க்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், வங்கியாளர்களின் கணக்கு புத்தக சான்றுகள் மசோதா - 2026ஐ லோக்சபாவில் அறிமுகப்படுத்தினார். சட்ட நடவடிக்கைகளில் நிதி பதிவுகள் பயன்படுத்தப்படும் முறையை நவீனமயமாக்க, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, வங்கியாளர்களின் கணக்கு புத்தக சான்றுகள் சட்டம் - 1891க்கு பதிலாக இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது, மின்னணு பதிவேடு பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளின் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில், வங்கி சான்றுகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்க முயல்கிறது. இது, வங்கி பதிவுகளுக்கு தொழில்நுட்ப நடுநிலையான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது, எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை அங்கீகரிக்கிறது, சான்றிதழ் வழங்கும் செயல்முறையை தரப்படுத்துகிறது, எலக்ட்ரானிக் வங்கி பதிவுகளை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் தன்மையை எளிதாக்குகிறது.
மேலும், வங்கிகள் வழக்கின் ஒரு தரப்பாக இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு முன்னதாக, அதற்கான சிறப்பு காரணத்தை பதிவு செய்யும்படி நீதிமன்றத்தை கட்டாயப்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை இந்த மசோதா வழங்குகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire