Paristamil Navigation Paristamil advert login

பெட்ரோல், மின்சாரம் தேவை இல்லை - சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்

பெட்ரோல், மின்சாரம் தேவை இல்லை - சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்

5 ஆவணி 2026 புதன் 18:42 | பார்வைகள் : 480


சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், பலரும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தற்போது அதற்கு மாற்றாக சூரிய சக்தி மூலமும் இயங்கும் ஸ்கூட்டரை அமெரிக்காவை சேர்ந்த அதர்லேப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு 'லைட்ஃபூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறுகிய தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் இருவர் அமர்வதற்கான இருக்கை வசதியுடன், பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது.

இதன் இரு பக்கத்திலும் தலா 120 வாட் திறன் கொண்ட 2 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பதன் மூலம், 5 கிமீ ஓடும் பயண வரம்பைப் பெற முடியும்.

இது முற்றிலுமாக சூரிய சக்தியில் மட்டுமல்லாது, மின்சார சார்ஜ் செய்து அதன் மூலமும் இயக்கி கொள்ளலாம். இதற்காக 1.1 kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த 48-வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரியும் உள்ளது.

இதன் மூலம் ஸ்கூட்டரை வீட்டில் உள்ள எலக்ட்ரிக் போர்டிலும் எளிதாக சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.

இந்த பேட்டரி ஒரு முழு சார்ஜில் சுமார் 60 கிலோமீட்டர்தூரம் பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 32 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் பின்புறத்தில், 45.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு பெட்டி உள்ளது. இதில் 20 கிலோகிராம் வரை பொருட்களை வைக்க முடியும். மளிகைப் பொருட்கள், ஹெல்மெட்கள் அல்லது பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை இதில் எளிதாக வைக்கலாம்.

முன்பக்கத்தில் 2.8-அங்குல நீர் புகாத தொடுதிரை எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வேகம், பேட்டரி நிலை மற்றும் விளக்கு குறித்த தகவல்களை வழங்குகிறது.

மேலும், 2,000 லூமன் முகப்பு விளக்கு, ஆக்சிலரோமீட்டர் மூலம் இயங்கும் பின்பக்க விளக்கு, 120 டெசிபல் ஹார்ன் மற்றும் எலக்ட்ரானிக் வீல் லாக் போன்ற அம்சங்களும் உள்ளன.

இதன் ஆரம்ப விலை 4,995 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 4.75 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.