Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis மாணவர்களுக்கு 2026 கல்வியாண்டு முதல் இலவச பாடசாலை உபகரணங்கள்!!

Saint-Denis மாணவர்களுக்கு 2026 கல்வியாண்டு முதல்  இலவச பாடசாலை உபகரணங்கள்!!

6 ஆவணி 2026 வியாழன் 07:54 | பார்வைகள் : 2139


Saint-Denis நகர மேயர் Bally Bagayoko, 2026ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடக்கம் முதல் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். Saint-Denis மற்றும் Pierrefitte-sur-Seine பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவசப் பொருட்கள் கிடைக்கும் என அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, 2026 கல்வியாண்டின் முதல் நாளில் Saint-Denis நகரிலுள்ள அரசுப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு அடிப்படை பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் forfait Imagine R பயண அட்டைச் செலவும் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள சரியான நிதித் தொகை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, தேர்தல் பிரசாரத்தின் மற்றொரு முக்கிய வாக்குறுதியான சைக்கிள் வழங்கும் திட்டமும் அடுத்த இலையுதிர் காலத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. 15 வயதுடைய  மாணவர்களுக்கு 1,000 மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி நகரசபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக 300,000 யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.