Paristamil Navigation Paristamil advert login

சைக்கிள் மற்றும் மின்சார trottinettes-இற்கு ஹெல்மெட் கட்டாயமா?

சைக்கிள் மற்றும் மின்சார trottinettes-இற்கு ஹெல்மெட் கட்டாயமா?

6 ஆவணி 2026 வியாழன் 21:31 | பார்வைகள் : 2090


அரசு, நாடு முழுவதும் சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர் (trottinettes) பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஹெல்மெட் (casque) அணிவதை கட்டாயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. தற்போது 12 வயதுக்குட்பட்ட சைக்கிள் பயணிகள் மற்றும் நகரங்களுக்கு வெளியே செல்லும் மின்சார ஸ்கூட்டர் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது. ஆனால், பல மாவட்டங்களில் ஏற்கனவே உள்ளூர் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், ஒரே மாதிரியான தேசிய சட்டத்தை கொண்டு வர அரசு விரும்புகிறது.

இந்த முடிவுக்கான முக்கிய காரணம், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதும், ஹெல்மெட் அணிவது உயிர்களை காப்பாற்றும் என்பதுமாகும். சமீபத்தில் ஹெல்மெட் அணியாத மின்சார ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் கடுமையான விபத்தில் சிக்கிய சம்பவமும் இந்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சாலைப் பாதுகாப்புத் துறை இதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் Marie-Pierre Vedrenne வாகன வேக வேறுபாடு, கனரக வாகனங்களின் போக்குவரத்து மற்றும் சாலைகளின் நிலை போன்ற அபாயங்களை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன், அரசின் சட்ட ஆலோசனைக் குழுவின் கருத்தும், போக்குவரத்து மற்றும் பயனாளர் அமைப்புகளின் ஆலோசனைகளும் பெறப்படும்.

இத்தாலி, டென்மார்க், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் குரோஷியா போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர் பயனாளர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக உள்ளது. அதேபோன்ற விதியை பிரான்சும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இருப்பினும், சில சைக்கிள் அமைப்புகள் இது பொதுப் பயன்பாட்டு சைக்கிள்களின் பயன்பாட்டைக் குறைக்கக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளன.