ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கடும் பின்னடைவு - மக்கள் ஆதரவு 16% ஆக சரிவு!!
13 புரட்டாசி 2026 ஞாயிறு 08:23 | பார்வைகள் : 1281
ஜனாதிபதி Emmanuel Macron மற்றும் பிரதமர் Sébastien Lecornu ஆகியோரின் மக்கள் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. Ipsos BVA-Cesi நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், Macron-க்கு வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும். இது அவர் பதவியேற்ற பின்னர் பதிவான மிகக் குறைந்த செல்வாக்கு மட்டமாகும்.
பிரதமர் Sébastien Lecornu-வின் நிலையும் சிறப்பாக இல்லை. அவருக்கு 20 சதவீதம் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது; முந்தைய கருத்துக்கணிப்பை விட 7 புள்ளிகள் குறைந்துள்ளது. குறிப்பாக Renaissance, MoDem மற்றும் Horizons கட்சிகளின் ஆதரவாளர்களிடையேயும் இருவரின் செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ளது. இந்தக் குழுவினரிடையே Macron-க்கு ஆதரவு 53 சதவீதமாக, 19 புள்ளிகள் குறைந்துள்ள நிலையில், Lecornu-வுக்கு ஆதரவு 64 சதவீதமாக, 14 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கிடையில், பிரெஞ்சு மக்களின் முக்கிய கவலைகளில் வாழ்க்கைச் செலவு மற்றும் வாங்கும் திறன் தொடர்பான சிரமங்கள் முதலிடத்தில் உள்ளன. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் இதை முக்கிய பிரச்சினையாக குறிப்பிட்டுள்ளனர். அடுத்ததாக சமூகப் பாதுகாப்பு அமைப்பின் எதிர்காலம் 40%, சுற்றுச்சூழல் 31%, குடியேற்றம் 31%, அரசுக் கடன் மற்றும் பற்றாக்குறை 30% என குறிப்பிடப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இணையவழியாக 1,000 நபர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.



