Aubervilliers 15ஆம் இலக்க மெட்ரோ பணித்தள பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு!!

Aubervilliers 15ஆம் இலக்க மெட்ரோ பணித்தள பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு!!

13 புரட்டாசி 2026 ஞாயிறு 23:11 | பார்வைகள் : 1665


Aubervilliers நகரின் Landy பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் மெட்ரோ இலக்கம் 15ஆம் பணித்தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 49 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை சுமார் 2.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை நண்பகலிலும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறிவைத்து சுடப்பட்டாரா அல்லது அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து வெளியேறிய “தவறுதலான குண்டு” (balle perdue) அவரைத் தாக்கியதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

Landy மற்றும் Maladrerie ஆகிய அண்டை பகுதிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மோதல்களுடன் இந்த சம்பவத்துக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. Bobigny அரசுத் தரப்பு, திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பான வழக்காக விசாரணையைத் தொடங்கியுள்ளது. Grand Paris Express திட்டத்தை முன்னெடுத்து வரும் Société des Grands Projets நிறுவனமும் பாதிக்கப்பட்ட பாதுகாவலருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து படிக்க