தமிழகம் முழுதும் 36,000 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
14 புரட்டாசி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 195
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்கள், தீயணைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லா சான்றுகள், காவல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பின்பற்றும் வகையிலும், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
சென்னை போலீஸ் எல்லைக்குள் 1,562 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 16,500 போலீசாரும், 500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் 'சி.சி.டி.வி.' கேமராக்களை பொருத்தவும், தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக நியமிக்கவும் சிலை அமைப்பாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காவல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, செப்., 19 மற்றும் 20ம் தேதிகளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
மேலும், அனுமதி வழங்கப்படாத இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்றும், காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



