ஆன்லைன் பத்திரங்களால் பத்திரப்பதிவு தாமதம்: பொதுமக்கள் புகார்
14 புரட்டாசி 2026 திங்கள் 08:10 | பார்வைகள் : 195
நேரில் வராமல் 'ஆன்லைன்' முறையில் தாக்கல் செய்யப்படும் பத்திரங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சார் - பதிவாளர்கள் முன்னுரிமை காட்டுவதால், ஏற்கனவே 'டோக்கன்' பெற்றவர்களின் பத்திரப்பதிவு தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் புதிய திட்டங்களில் ஒன்றாக, வீடு, மனை வாங்குவதற்கான பத்திரங்களை சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் வசதி, ஆக., 17ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது வீட்டுக்கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கும் எம்.ஓ.டி., எனப்படும் ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம், கடன் முடிவடைந்தபோது மேற்கொள்ளப்படும் ரசீது ஆவணம் ஆகியவற்றையும் நேரில் வராமல் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் முறையில் பொதுமக்கள் தாக்கல் செய்யும் பத்திரங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் சார் - பதிவாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தினமும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு வந்ததும், முதல் பணியாக ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகே வழக்கமான பிற பத்திரங்களை பதிவு செய்யும் பணிக்கு வருகின்றனர்.
இதன் காரணமாக, காலையில் பத்திரப்பதிவுக்காக டோக்கன் பெற்று வருவோர், பகல் 12:00 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக பெறப்படும் டோக்கன், இதனால் பயனற்றதாகி விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் முறையில் பதிவாகும் பத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை. அதேநேரத்தில், நேரடியாக பதிவு செய்ய வருவோரை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல், அவர்களுக்கும் உடனடியாக பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சார் - பதிவாளர் ஒருவர் கூறியதாவது:
பதிவுத்துறை இணையதளத்தில், ஆன்லைன் பத்திரப்பதிவு பணிகளை முடித்த பின்னரே நேரடியாக வரும் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் விரும்பினாலும், ஆன்லைன் பத்திரங்களை தவிர்த்து பிற பத்திரங்களை முதலில் பதிவு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



