மோடி விருந்தில் ஜின்பிங் பங்கேற்காதது ஏன்?

மோடி விருந்தில் ஜின்பிங் பங்கேற்காதது ஏன்?

14 புரட்டாசி 2026 திங்கள் 10:15 | பார்வைகள் : 209


'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் டில்லி வந்த சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். ஆனால், பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு யூகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தாண்டு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, டில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று (செப்., 12) துவங்கி இன்று நிறைவடைந்தது.

### முக்கியத்துவம்

முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்பாரா என்பது கடைசி வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது. அவர் வருவார், வரமாட்டார் என மாறிமாறி தகவல்கள் வெளியான நிலையில், மாநாடு துவங்குவதற்கு ஒரு நாள் முன்புதான் ஜின்பிங்கின் பயணம் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில், சர்வதேச அரசியல் குழப்பங்களும் அதிகரித்துள்ள சூழலில், ஜின்பிங்கின் வருகை முக்கியத்துவம் பெற்றது.

மாநாட்டுக்கு வந்த அவர், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட தலைவர்களுடன் சகஜமாக பேசினார். மாநாட்டிலும் தனது நாட்டின் நிலைப்பாட்டை அவர் உறுதியாக தெரிவித்தார்.

சர்வதேச அளவில் 'குளோபல் சவுத்' எனப்படும் உலகின் தென்பகுதியில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

மாநாட்டில் பங்கேற்றாலும், இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சு நடைபெறுமா என்பது கடைசி வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகவும் இந்த சந்திப்பு அமைந்தது.

இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார். ஆனால், ஜின்பிங் அதில் பங்கேற்கவில்லை.

அவர் விருந்தில் பங்கேற்காததற்கான காரணத்தை மத்திய அரசோ அல்லது சீன அரசோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் விருந்தில் பங்கேற்கவில்லை. மாநாடு முடிந்ததும் அவர் புறப்படுவது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததால், அவரது பங்கேற்பின்மை சர்ச்சையாகவில்லை.

ஆனால், ஜின்பிங் இரவு விருந்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பாக பல்வேறு யூகங்களும், கேள்விகளும் எழுந்தன.

### சோர்வு

நீண்ட துார பயணம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான நேர வித்தியாசம் காரணமாக ஜின்பிங் சற்று சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே அவர் இரவு விருந்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தரப்பிலும், 'ஜின்பிங்கின் இந்தப் பயணம் இருதரப்பு உறவில் புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இந்தியாவுடன் நெருக்கமான நட்பை அவர் விரும்புகிறார். தனிப்பட்ட காரணங்களாலேயே இரவு விருந்தில் பங்கேற்க முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

### சீர்திருத்தத்துக்கு ஐ.நா., ஆதரவு

'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் தேவை' என்ற பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ஐ.நா., பொதுச் செயலர் அலுவலகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் ஐ.நா., பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசியதாவது:

ஐக்கிய நாடுகளின் அமைதியும், பாதுகாப்பும் சார்ந்த கட்டமைப்பின் மையமாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. தற்போது ஐந்து நிரந்தர உறுப்பினர்களை கொண்ட அதன் அமைப்பு, 21ம் நுாற்றாண்டின் உண்மையான பிரதிநிதித்துவமாக இல்லை.

பாதுகாப்பு கவுன்சில் மட்டுமின்றி, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளும் தற்போதைய சூழலில் நிலவும் உலக யதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளின் குரல்களும் ஒலிக்கும் வகையில், 'கூட்டாண்மை தளம்' உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

### சீன - ரஷ்ய தலைவர்களுக்கு நடுவே பிரதமர் மோடி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று, அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு நடுவில் பிரதமர் மோடி நின்றார்.

### மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும்

டில்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.

இதில் பல மத்திய அமைச்சர்களும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். அவர்கள் விழா அரங்குக்கு சிறப்பு பஸ்சில் ஒன்றாக பயணம் செய்தனர்.

மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன், பீயூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும் பஸ்சில் பயணித்தனர்.

### 11 நாடுகள்; 4 கண்டங்கள்

பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நாடுகள் அனைத்தும் இணைந்து உலகின் மக்கள் தொகையில் 49.5 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 26 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

பிரிக்ஸ் அமைப்பின் புவியியல் பரப்பளவு தற்போது ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களில் விரிவடைந்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க