ஈரான் - எமிரேட்ஸ் பேச்சு: இந்தியா சமரச முயற்சி

ஈரான் - எமிரேட்ஸ் பேச்சு: இந்தியா சமரச முயற்சி

14 புரட்டாசி 2026 திங்கள் 11:19 | பார்வைகள் : 165


மேற்காசிய பிராந்தியத்தில் போர் சூழல் நீடித்து வரும் நிலையில், டில்லியில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' மாநாட்டுக்கு இடையே ஈரான் மற்றும் யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்துள்ள போர், ஆறு மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இதற்கிடையே, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில், டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு இடையே, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் மற்றும் எமிரேட்சின் தலைநகரான அபுதாபியின் பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது பின் சயீத் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரு தலைவர்களும் சந்தித்து பேசியதை ஈரான் துாதரகம் உறுதி செய்ததுடன், அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டது.

கடந்த ஏப்ரலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், ஈரான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நட்பு நாடுகளுக்கு இடையே பேச்சு நடந்தது. அப்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தியா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் சமரச முயற்சியின் காரணமாகவே இரு தரப்பினரும் பேச்சுக்கு முன்வந்ததாக கூறப்படுகிறது.
 

தொடர்ந்து படிக்க