இந்தியாவிடம் ரஷ்யா அதிக எரிபொருள் கொள்முதல்

இந்தியாவிடம் ரஷ்யா அதிக எரிபொருள் கொள்முதல்

14 புரட்டாசி 2026 திங்கள் 12:21 | பார்வைகள் : 188


உக்ரைனின் தொடர் வான்வழி தாக்குதல்களால் ரஷ்யாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிடம் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.72 லட்சம் டன் எரிபொருளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. சமீப காலமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் முடங்கியுள்ளது.

இந்நிலையில், சி.ஆர்.இ.ஏ., எனப்படும் எரிசக்தி மற்றும் துாய காற்று ஆராய்ச்சி மையம், ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி மற்றும் தடைகள் தொடர்பாக நேற்று வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவிடம் இருந்து ரஷ்யா 1.72 லட்சம் டன் எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது. இது ரஷ்யாவின் மொத்த பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியில் 70 சதவீதமாகும்.

இந்த இறக்குமதியில் 864 கோடி ரூபாய் மதிப்பிலான 1.20 லட்சம் டன் பெட்ரோலும் அடங்கும். ரஷ்யாவின் இந்த இறக்குமதி, முந்தைய மாத சாதனையை விட ஏழு மடங்கு அதிகமாகும். அதேபோல், 2025ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெட்ரோல் முழுவதும் குஜராத்தின் வதினார் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் தடைகளுக்கு உள்ளான 'நயரா எனர்ஜி' நிறுவனம், இந்த பெட்ரோலை 'ரோஸ்நெப்ட்' நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

வதினார் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தேவையான 100 சதவீத கச்சா எண்ணெயும் ரஷ்யாவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால், உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத எரிபொருளை பெறுவதற்காக, தனது சொந்த கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்கு தன்னிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கே ரஷ்யா பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் தொடர் வான்வழி தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாகவே இந்தியாவிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டிய சூழல் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் முன்னணி நாடாக விளங்கிய ரஷ்யா, தற்போது தனது ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில், பெட்ரோல் இறக்குமதியில் மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது.

2023 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதியில் சராசரியாக வெறும் 6 சதவீதமாக இருந்த பெட்ரோலின் பங்கு, கடந்த ஆகஸ்டில் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உக்ரைனின் தாக்குதல்களால் ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஆகஸ்டில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, முந்தைய மாதத்தை விட 58 சதவீதம் சரிந்தது.

ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி வருவாய் 8 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க