வணிகக் கப்பல் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

வணிகக் கப்பல் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

14 புரட்டாசி 2026 திங்கள் 14:53 | பார்வைகள் : 222


ஓமன் கடற்கரைக்கு அப்பால், பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன இந்திய மாலுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஓமன் கடல் பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற ‘எம்டி எல் கையா’ என்ற எண்ணெய் கப்பல் மீது திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மற்றொரு மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓமன் கடற்கரைக்கு அப்பால் ‘எம்டி எல் கையா’ என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது. கப்பலில் இருந்த 14 இந்தியக் குழுவினரில் இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்திய மாலுமியை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஓமனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்திய மாலுமிகளை மீட்பதில் ஓமன் அதிகாரிகள் அளித்த ஆதரவிற்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என்ற இந்தியாவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இப்பகுதியில் வணிகக் கப்பல்கள், மாலுமிகள், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இப்பகுதியில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க