தமிழகத்தில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு: ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு: ஒப்பந்தம் கையெழுத்து

15 புரட்டாசி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 256


சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இன்று ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் அவரது முன்னிலையில் கையெழுத்தானது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனப் பிரிவு தலைவர் பேரி பெயின்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

**உலகளாவிய திறன் மையங்கள்**

தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக அமைக்கவும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில், 2,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது. சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 'GCC காரிடார்' பகுதியில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழகத்தில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சி மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் தனது உலகளாவிய திறன் மையங்களை, இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவுபடுத்த உறுதியளித்துள்ளது.

இதற்காக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் சிக்மா டெக்னாலஜி குரூப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

**ரூ.300 கோடி**

தமிழகத்தில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குனர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குனர் டென்னிஸ் சோர்பி மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
 

தொடர்ந்து படிக்க