எந்த துண்டு சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சபாநாயகர் பிரபாகர்

எந்த துண்டு சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சபாநாயகர் பிரபாகர்

15 புரட்டாசி 2026 செவ்வாய் 06:30 | பார்வைகள் : 219


"எந்த சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தேவைப்பட்டால், சட்டசபை செயலகத்தில் இருந்து குறிப்புகளைப் பெற்றுக் கொள்வேன்" என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

**நேரலை**

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சபாநாயகர் என்ற முறையில், என் மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து எம்எல்ஏக்களின் மாண்பை காப்பதே எனது முதல் பணி. திங்கட்கிழமை முதல்வர் பதிலுரை ஆற்றியபோது, முதல் நிமிடம் முதல் கடைசி நிமிடம் வரை திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவையில் இருந்த அனைவரும், மக்களும் அறிவார்கள். அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. அதன் மூலம் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

நேரலை ஒளிபரப்பின்போது திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் மற்றும் போஸ்டர்களை ஏந்தியபடி நின்றனர். இது சட்ட விதிகளுக்கு எதிரானது. ஆனால், அது குறித்து நான் கேள்வி எழுப்பவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அதனை மக்கள் பார்க்கும் வாய்ப்பு இருந்தது.

முதல்வரின் பேச்சை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் செயல்படுகிறார்களோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அவர்கள் கூச்சலிட்டனர், கத்தினர். சபாநாயகர் இந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். எப்போது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற முடிவை நான்தான் எடுப்பேன். அதன்படியே முடிவு செய்தேன்.

**கவலை**

முதல்வரின் பேச்சு முழுமையாக மக்களைச் சென்றடைந்த பிறகு, அந்தப் பக்கம் திரும்பி அவர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை கவனித்தபோதுதான், பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அமைதியாக முதல்வரின் பேச்சைக் கேட்டுவிட்டு, 'பாயின்ட் ஆப் ஆர்டர்' அல்லது விளக்கம் கேட்டு இருந்தால், நான் நிச்சயம் அனுமதி அளித்திருப்பேன். ஆனால், முதல்வரின் பேச்சைக் கேட்க விடாமல், அந்தச் செய்தி மற்றவர்களுக்கு சென்றுவிடக் கூடாது என்ற கவலையில் அவர்கள் செயல்பட்ட விதம் எனக்கு உகந்ததாகத் தெரியவில்லை.

அடுத்த நாள் திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு, முதல்வரின் பேச்சுக்கு நீண்ட விளக்கம் அளிக்க நான் அனுமதி வழங்கினேனா, இல்லையா? அவர் முழுமையாகப் பேசினார். அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளிப்பது போல் பேசினார். அதற்கு பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற கூச்சல், குழப்பம் குறித்து அனைவரும் அறிவார்கள். உட்காருங்கள் என்று கூறினேன். ஆனால், உட்காரவில்லை. முன்னோக்கி ஓடி வராதீர்கள் என்று கூறினேன். ஆனால், ஓடி வந்தார்கள். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சபையை நடத்த முடியாத வகையிலும் அவர்கள் செயல்பட்டதை நான் பார்த்தேன்.

அமைச்சர்கள் பேசிய பிறகு வேலுவை அழைத்து, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர் பேசவில்லை. கொறடா பேச விரும்பவில்லை என்றால் நேரு பேசலாம் என்றும் கூறினேன். அவரும் பேசவில்லை. ஆனால், என்னுடைய இருக்கையைச் சுற்றி நின்றுகொண்டு தொடர்ந்து கூச்சல் போடுவதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

**நடுநிலை**

மீண்டும் மீண்டும் எனது இருக்கையை நோக்கி அவர்கள் வந்ததைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், சபையின் மாண்பு குறைவதையும், அமைதி குலைவதையும், சபையை நடத்துவதற்கு ஏற்பட்ட தடையையும் கருத்தில் கொண்டேன்.

அன்றும் மேற்கொண்டு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கியபோதும் பேசாதது யாருடைய தவறு என்பதை உறுப்பினர்களும், மக்களும் நன்றாக அறிவார்கள். திமுகவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. திமுக எம்எல்ஏக்களும் அதிக நேரம் பேசியுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. நான் நடுநிலையோடுதான் செயல்பட்டுள்ளேன்.

எந்த சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு குறிப்புகள் தேவைப்பட்டால், சட்டசபை செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்வேன். ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் குறித்தும், அமலாக்கத்துறை குறித்தும் பேசியிருப்பது குறிப்பில் இருந்தால், எந்த ஆண்டு, எந்த நாளில் பேசினர் என்பதை குறிப்பெடுத்து தருமாறு கேட்டிருந்தேன்.

உடனடியாக விவாதத்திற்கு தயாராகும்போது, அவைக் குறிப்பில் அந்த விவரங்கள் இருந்தால், எந்த நாளில், எந்த நேரத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே கேட்டிருந்தேன். அதற்காக அந்தத் துண்டுச் சீட்டைத்தான் கொடுத்திருந்தார்கள்.

சபையை எப்படி நடத்த வேண்டும், யாரைப் பேச அனுமதிக்க வேண்டும், யாரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்பதெல்லாம் யார் துண்டுச் சீட்டு கொடுத்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. எந்தத் துண்டுச் சீட்டுக்கும் பயந்து சட்டசபையை நடத்துபவன் நான் அல்ல.

இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க