பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கண்டனம்: ஜெய்சங்கர் வரவேற்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கண்டனம்: ஜெய்சங்கர் வரவேற்பு

15 புரட்டாசி 2026 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 179


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பிரிக்ஸ் மாநாட்டில் கண்டிப்பது தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

**இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:**

பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட டில்லி பிரகடனத்தின் வாயிலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத செயல்பாடும் குற்றம் என்பதில் பிரிக்ஸ் அமைப்பு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை பிரிக்ஸ் அமைப்பு வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் பிரிக்ஸ் நாடுகள் கண்டித்துள்ளன. மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளையும் நிராகரித்துள்ளன.

பிரதமர் மோடியின் ராஜதந்திரம் மற்றும் வளர்ச்சி குறித்த செய்தி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்திக்கு கிடைத்த வரவேற்பை, பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் பங்கேற்றபோது நாம் காண முடிந்தது.

இது நடக்காது என்று பலர் கூறினார்கள். ஆனால், அது நடந்தது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இது நடந்துள்ளது.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

**பிரிக்ஸ் மாநாடு**

டில்லியில் நேற்று முன்தினம் (செப்.,12) தொடங்கிய பிரிக்ஸ் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் நடமாட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.

ஐநா சபையின் கீழ் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான உடன்படிக்கையை விரைவாக இறுதி செய்து, பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள், பணமோசடி, இணையவழி மற்றும் எல்லை தாண்டிய வலையமைப்புகள் குறித்தும் பிரகடனத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பயங்கரவாதம் தொடர்பான ஒருமித்த கருத்தில் சீனாவும் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

தொடர்ந்து படிக்க