மோடியின் வெளியுறவு கொள்கைக்கு சீனா பாராட்டு

மோடியின் வெளியுறவு கொள்கைக்கு சீனா பாராட்டு

15 புரட்டாசி 2026 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 177


இந்தியாவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், அதனை சீனா மதிக்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்றார். மாநாட்டுக்கு இடையே அவரை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவா ஜியாகுன் கூறியதாவது:

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்ற ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது.

இந்தியாவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா உறவுகளின் வளர்ச்சி எந்த மூன்றாவது தரப்பினாலும் பாதிக்கப்படாது. மேலும், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிக்கையை சீனா மதிக்கிறது.

இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் அதே நேரத்தில், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்.

சீனாவும் இந்தியாவும், ஒருவருக்கொருவர் உள்ள பொருளாதார மற்றும் வர்த்தகக் கவலைகளை சமச்சீரான முறையில் கையாள வேண்டும். இதன் மூலம் இருதரப்பு பொருளாதார உறவுகளின் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க