ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி?: கனிமொழி முயற்சி

ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி?: கனிமொழி முயற்சி

15 புரட்டாசி 2026 செவ்வாய் 12:54 | பார்வைகள் : 204


தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதேபோல், டில்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார்.

**கருத்து வேறுபாடு**

'இண்டி' கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனிமொழியின் தற்போதைய சந்திப்புகள் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக கருதப்படுகின்றன.

**திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:**

உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை குறித்தும், அதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது தொடர்பாகவும் பேசியுள்ளார். சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்ற நிலையில், திமுக அதனை புறக்கணித்தது. இதேபோல், மஹாராஷ்டிராவில் காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

**நெருங்கிய தோழி**

இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை அவர் சந்திக்க உள்ளார். ஏற்கனவே, கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷ் யாதவின் மனைவியும் லோக்சபா எம்.பி.யுமான டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவடைந்ததும், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் மூலம், தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார்.

இவ்வாறு திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தொடர்ந்து படிக்க