Impôts: உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எப்போது பணம் பிடித்தம் செய்யப்படும்?
14 புரட்டாசி 2026 திங்கள் 20:29 | பார்வைகள் : 2022
2025ஆம் ஆண்டுக்கான வருமானவரியில் இன்னும் செலுத்த வேண்டிய தொகை உள்ளவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அந்தத் தொகையை வரித்துறை நேரடியாகப் பிடித்தம் செய்ய உள்ளது. சம்பளத்திலிருந்து ஏற்கனவே வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதிக வருமானம் பெற்றவர்கள், அதிகமான வரிச்சலுகை முன்பணம் பெற்றவர்கள் அல்லது தவறான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கலாம்.
செலுத்த வேண்டிய தொகை 300 யூரோக்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், செப்டம்பர் 25ஆம் தேதி ஒரே முறையில் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். தொகை 300 யூரோக்களை தாண்டினால், அது நான்கு தவணைகளாக, செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 28 வரை பிடித்தம் செய்யப்படும்.
இந்தப் பிடித்தம் செய்யப்படும் திகதிகள், சமீபத்தில் கிடைத்த வரி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. வரித்துறையின் இணையதளத்தில் உள்ள உங்கள் தனிப்பட்ட கணக்கில் அறிவிப்பைப் பார்க்கலாம். மேலும், வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியம்; இல்லையெனில் பிடித்தம் நிராகரிக்கப்பட்டு அபராதம் ஏற்படலாம்.
இந்த ஆண்டு கூடுதல் வரி செலுத்த வேண்டியவர்கள், 2027ஆம் ஆண்டுக்கான வரியையும் முன்கூட்டியே திட்டமிடலாம். உங்கள் தற்போதைய வருமான நிலைக்கு ஏற்ப சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வரி விகிதத்தையும், வரிச்சலுகை மற்றும் வரிக் கடன் முன்பணத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் அதிகமாகப் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்.



