தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.27,000க்கு விற்பனை
15 புரட்டாசி 2026 செவ்வாய் 13:08 | பார்வைகள் : 224
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இனிப்புக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த கொழுக்கட்டை, ஒரு கிலோ ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள 'சாகர் ஸ்வீட்ஸ்' இனிப்புக் கடையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆண்டும் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கொழுக்கட்டையை ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
### அறிமுகம்
கடந்த 2021ம் ஆண்டு தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை அறிமுகம் செய்யப்பட்டபோது, ஒரு கிலோ ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அதன் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக இதை ஆர்வத்துடன் வாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து இந்த தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இதில் 24 காரட் தூய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதால் மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
### தூய்மையானது
இதற்கு ஐரோப்பிய யூனியனின் உணவு பாதுகாப்பு அமைப்பும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. தூய்மையான தங்கம், மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்தவித வேதிவினையும் புரியாது. அது ரத்தத்தில் கலக்காமல், செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தை உண்பதால் உடலுக்கு எந்தவித நன்மையோ, வைட்டமின்களோ அல்லது ஊட்டச்சத்துகளோ கிடைப்பதில்லை. இது ஆடம்பரத்திற்காகவும், காட்சி அழகுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உணவில் பயன்படுத்தப்படும் தங்கம் 23 முதல் 24 காரட் தூய்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தங்கத்தில் செம்பு, நிக்கல் அல்லது துத்தநாகம் போன்ற பிற உலோகங்கள் கலந்திருக்கும். எனவே, அதை உட்கொண்டால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.



