இரு கம்யூனிஸ்டு கட்சிகளால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

இரு கம்யூனிஸ்டு கட்சிகளால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

16 புரட்டாசி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 170


மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காண உள்ளதால், 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. இதனால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

### பொதுத் தேர்தலில் 4 முனைப்போட்டி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தல் களத்தில் புதிதாக களம் இறங்கிய த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

### இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை

2 தொகுதி இடைத்தேர்தலிலும் பொதுத் தேர்தலைப் போலவே 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் முடிவால் தற்போது 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டபோது, இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவு அளித்தன.

ஆனால், இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை என அறிவித்துள்ள இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன.

### யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

இதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்குகின்றன.

இவ்வாறு இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தனியாக களம் காண்பதால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

### வாக்கு சதவீதம் எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 34.92 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 24.19 சதவீதமும், அ.தி.மு.க.வுக்கு 21.21 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

தேசிய கட்சிகளான காங்கிரசுக்கு 3.37 சதவீதமும், பா.ஜ.க.வுக்கு 2.97 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீத வாக்குகள் கிடைத்தன.

### இடைத்தேர்தலில் 39.67 சதவீத வாக்குகள்

பொதுத் தேர்தலில் தனித்து களம் கண்ட த.வெ.க.வுடன் (34.92 சதவீதம்), இந்த முறை இடைத்தேர்தலில் காங்கிரஸ் (3.37), ம.தி.மு.க. (?), விடுதலை சிறுத்தைகள் (1.09), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (0.29) ஆகிய கட்சிகள் கைகோர்த்துள்ளன.

இதனால், த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநல வெற்றிக் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் 39.67 சதவீத வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், அக்கட்சிக்கு என தனியாக வாக்கு சதவீதம் பதிவாகவில்லை.

### தி.மு.க. கூட்டணிக்கு எவ்வளவு வாக்கு?

எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. (24.19), தே.மு.தி.க. (1.20) ஆகிய இரு கட்சிகளே பிரதானமாக உள்ளன. இதனால், அந்தக் கூட்டணிக்கு 25.39 சதவீத வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது.

மற்றொரு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. (21.21), பா.ஜ.க. (2.97), பா.ம.க. (2.17), அ.ம.மு.க. (0.87) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், அந்தக் கூட்டணிக்கு 27.22 சதவீத வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

### இரு கம்யூனிஸ்டு கட்சிகளால் தி.மு.க.வுக்கு பாதிப்பு

இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவதால், அந்தக் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 0.60 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.66 சதவீதமும் என மொத்தம் 1.26 சதவீத வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது.

இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தனியாக களம் காண்பது தி.மு.க.வுக்கே பாதகமாக அமைந்திருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், அ.தி.மு.க.வுக்கு இது லாபமாக அமையும் என்றும், த.வெ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

### அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம்

இந்த வாக்கு சதவீதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில், அ.தி.மு.க. 2-வது இடத்தை பிடிக்கும் என்றும், தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தையும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி 5-வது இடத்தையும் பிடிக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த கணிப்பு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். த.வெ.க. அரசின் 4 மாத ஆட்சி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பொறுத்து, இடைத்தேர்தலில் வாக்கு சதவீதத்தில் சற்று மாற்றங்கள் ஏற்படலாம்.
 

தொடர்ந்து படிக்க