மத்திய அரசின் எச்சரிக்கைக்கு பணிந்த மெட்டா
16 புரட்டாசி 2026 புதன் 06:36 | பார்வைகள் : 184
'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான 'மெட்டா', குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்த புகார்களை இந்திய சைபர் குற்றப்பிரிவிடம் நேரடியாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆன்லைன் உள்ளடக்கங்களை தடை செய்ய வேண்டும் என, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'மெட்டா' நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.
மேலும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள், இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்தி வெளியிடப்படும் விளம்பரங்களில் இடம்பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 'மெட்டா' நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
குழந்தைகளின் இணையதளப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் 'மெட்டா' நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை இந்திய சைபர் குற்றப்பிரிவு ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் செயல்படும் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு நேரடியாக வழங்க 'மெட்டா' ஒப்புக்கொண்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் செயல்படும் 'காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம்' மூலமாகவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பான புகார்களை 'மெட்டா' நிறுவனம் கையாண்டு வந்தது. தற்போது, முதல்முறையாக இந்திய சட்ட அமலாக்க முகமைகளுடன் நேரடியாக புகாரளிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து 'மெட்டா' செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுடன் இணைந்து செயல்பட உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
சமூக வலைதளங்களில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து நீக்குவதற்கு தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



