ஏஐ மூலம் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்: நிர்மலா சீதாராமன்
16 புரட்டாசி 2026 புதன் 07:38 | பார்வைகள் : 172
காளிதாசரின் இலக்கிய வளத்தை, 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உலகறியச் செய்ய வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியில், மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் 'ஆர்டிகுலேட் 8' ஏஐ நிறுவனம் இணைந்து உருவாக்கிய 'சமஸ்கிருத பாரம்பரிய மாதிரி' அறிமுக விழா நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
பண்டைய அறிஞர்களும், முனிவர்களும் சமஸ்கிருத இலக்கணம் மற்றும் மொழிக் கட்டமைப்பை மிகவும் துல்லியமாக உருவாக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் துல்லியம், இன்றைய 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சமஸ்கிருதத்தை இணைப்பதற்கான முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ அண்ட் ஜூலியட்', 'ஜூலியஸ் சீசர்' போன்ற படைப்புகள் குறித்து ஏராளமான ஆய்வுகளும், விளக்க நூல்களும் கிடைக்கின்றன. ஆனால், காளிதாசரின் படைப்புகளைப் பொறுத்தவரை, அவரது இலக்கியச் சிறப்பு, உவமை மற்றும் மொழி வளத்தை விரிவாக விளக்கும் நூல்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் போதுமான அளவில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு மூலம் நிரப்ப முடியும். காளிதாசரின் அனைத்து படைப்புகளையும் 'ஏஐ' வாயிலாக ஆய்வு செய்து, அவர் பயன்படுத்திய முக்கியமான உவமைகள், சொல்வளம், இலக்கண அமைப்பு மற்றும் மனிதப் பண்புகளை வெளிப்படுத்தும் விதம் உள்ளிட்டவற்றை உடனடியாக தொகுத்து வழங்க முடியும்.
சமஸ்கிருதத்தின் தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பரவியுள்ளது. உலகின் பல்வேறு அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் உள்ள சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் சார்ந்த கையெழுத்துப் பிரதிகள், செப்பேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒருங்கிணைத்து அடையாளம் காண்பது முக்கியம்.
தொழில்நுட்பத்தின் வேகத்தையும், திறனையும் பயன்படுத்தி, இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் மொழி மரபை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.



